உதகையில் கட்டுமான பணியின்போது மண்ணில் புதைந்து ஒருவர் பலி!

உதகையில் கட்டுமான பணியின் போது மண் சரிந்து விழுந்ததில், இரு வடமாநில தொழிலாளிகள் சிக்கிக் கொண்டனர். இருவரும் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், ஒருவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

நீலகிரி மாவட்டம் மலை மாவட்டம் என்பதால், பெரும்பாலான பகுதிகளில் கட்டுமானப் பணிகள் மலைச் சரிவுகளில் மேற்கொள்ளப்படுகிறது. இதனால், கட்டுமான பணிகளுக்காக தடுப்பு சுவர் கட்டும்போது அல்லது பள்ளம் தோண்டுபோது மண் சரிந்து விழுந்து அதில், தொழிலாளர்கள் சிக்கிக் கொள்வது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில், உதகை அருகேயுள்ள பாபுசா லைன் பகுதியில் கவுசல்யா என்பவரின் வீட்டின் அருகே தடுப்புச் சுவர் கட்டுவதற்காக கட்டுமானப் பணிகள் நடந்து வருகிறது. இதில், ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ரிஸ்வான் (20), ஜாகீர் (26), இம்தியாஸ் மற்றும் அமீர் ஆகியோர் வேலை செய்துக் கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாரதவிதமாக மண் சரிந்து விழுந்தது. இதில், ரிஷ்வான் மற்றும் ஜாகீர் ஆகியோர் மண்ணில் புதையுண்டனர். உடனடியாக அருகில் இருந்தவர்கள் தீயணைப்புத்துறை மற்றும் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த தீயணைப்புத்துறையினர் அவர்களை ஜேசிபி இயந்தரம் கொண்டு மண்ணை அகற்றி, மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரத்துக்குப் பின் இருவரையும் உயிருடன் மீட்டனர்.

இருவரும் உடனடியாக உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில், ஜாகீர் நல்ல நிலையில் உள்ளார். ஆனால், ரிஸ்வானுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மயக்க நிலையில் இருந்தார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி ரிஸ்வான் உயிரிழந்தார். விபத்து நடத்த இடத்துக்கு நீலகிரி எஸ்பி., சுந்தரவடிவேல் வந்து மீட்புப் பணிகளை துரிதப்படுத்தினர். மேலும், எம்எல்ஏ., கணேஷ் சம்பவ இடத்துக்கு வந்து மீட்புப் பணிகளைப் பார்வையிட்டார்.