ஜாபர் சாதிக் விடுதலையாக காரணமே எடப்பாடி பழனிசாமிதான்: ஆர்.எஸ்.பாரதி!

தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கம் அதிகம் உள்ளதாக அவதூறு பரப்பி வருகிறார் எடப்பாடி பழனிசாமி என்றும், 2017ல் ஜாபர் சாதிக் போதைப்பொருள் வழக்கில் விடுதலையாக காரணமே எடப்பாடி பழனிசாமிதான் என்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டது தொடர்பாக கடந்த மார்ச் 8ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, இந்த விவகாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தொடர்புபடுத்தி பேசியிருந்தார். அதேபோல இந்த விவகாரம் தொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தொடர்புபடுத்தி பேசியிருந்தார். இதையடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் சென்னை மாநகர குற்றவியல் வழக்கறிஞர் ஜி.தேவராஜன், சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், எடப்பாடி பழனிசாமி மற்றும் அண்ணாமலைக்கு எதிராக அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.போதைப்பொருள் தொடர்பாக தமிழ்நாட்டில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், முதலமைச்சரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசிய எடப்பாடி பழனிசாமி மற்றும் அண்ணாமலை மீதும் கிரிமினல் அவதூறு பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

இதேபோல, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மான நஷ்ட ஈடு கோரி திமுக சார்பில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் போதைப்பொருள் பறிமுதல், கைது தொடர்பான சமீப நிகழ்வுகளில் திமுகவை தொடர்புபடுத்தி பேசியதாகவும், இதனால் திமுகவின் நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் கடத்தல் வழக்கில் திமுகவை தொடர்புபடுத்தி பேச அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தடை விதிக்கவும், ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்கக் கோரியும் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்துள்ள மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் ஆர்.எஸ்.பாரதி. அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கம் தலைவிரித்து ஆடி வருவதைப் போல அவதூறு பரப்பி வருகிறார் எடப்பாடி பழனிசாமி. மேலும் போதைப்பொருள் நடமாட்டத்திற்கும் முதலமைச்சர் ஸ்டாலின் குடும்பத்தினருக்கும் தொடர்பு இருக்கிறது என்பதை போல தவறான எண்ணத்தை பொதுமக்கள் மத்தியில் பரப்பி வருகிறார். பல்வேறு விளக்கங்கள் கொடுத்த பிறகும் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி இவ்வாறு பேசி வருவதால் சென்னை ஐகோர்ட்டில் ரூ.1 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு வழக்கை தாக்கல் செய்துள்ளோம். தமிழ்நாட்டில் யாருடைய ஆட்சியில் போதைப் பொருட்கள் புழக்கம் அதிகம் இருந்தது என்பது அனைவருக்கும் தெரியும்.

திமுக ஆட்சியில் தான் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்திருப்பது போல பேசி வருகின்றனர். இதே ஜாபர் சாதிக் மீது அதிமுக ஆட்சி காலத்தில் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது 2013ஆம் ஆண்டில் வழக்கு தொடரப்பட்டு, அந்த வழக்கு எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது 2017ஆம் ஆண்டில் விடுதலை செய்யப்பட்டார் ஜாபர் சாதிக். ஜாபர் சாதிக் விடுதலைக்கு யார் காரணம் என்றால், எடப்பாடி பழனிசாமியால் நியமிக்கப்பட்ட அரசு வழக்கறிஞர். அரசு வழக்கறிஞர் சீனிவாசன் என்பவர் குற்றம்சாட்டப்பட்ட ஜாபர் சாதிக் உடன் சேர்ந்துகொண்டு வழக்கை திசைமாற்றி அவரை விடுவிக்க காரணம் இருந்ததற்காக வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் அகில இந்திய பார் கவுன்சிலுக்கு புகார் தெரிவிக்கப்பட்டு அவர் பார் கவுன்சிலில் இருந்து நீக்கப்பட்டார். அவர் அதிமுகவில் நிர்வாகியாக இருந்தவர், எடப்பாடி பழனிசாமியால் நியமிக்கப்பட்டவர்.

மேலும், ஜாபர் சாதிக்குக்கு ஆதரவாக ஆஜரானவர் இன்றைக்கு பாஜகவில் இருக்கக்கூடிய பால் கனகராஜ். அவர் வழக்கறிஞர் என்ற முறையில் ஆஜராவதில் பிரச்சனை இல்லை. ஆனால், நிலைமை இப்படி இருக்க, இவர்களால் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்ததை, 3 ஆண்டுகளில் திமுக அரசு பெருவாரியாக கட்டுப்படுத்தியுள்ளது. நிலை இப்படி இருக்க, தொடர்ந்து திமுக ஆட்சியின் மீது மக்கள் கொண்டுள்ள நல்ல நம்பிக்கையை சிதைக்கும் வகையிலும், கருத்துக்கணிப்புகளில் எல்லாம் திமுக வெற்றி பெறும் என வந்துகொண்டிருப்பதால் மக்களின் கவனத்தை திசை திருப்ப திட்டமிட்டு இப்படி ஒரு பொய் பிரச்சாரத்தை எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டுள்ளார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.