சீமான் எங்களுடன் கூட்டணி வைத்தால் விவசாயி சின்னத்தை தரத் தயாராக உள்ளோம். இல்லை என்றால் அவரை எதிர்த்து போட்டியிடுவோம் என்று பாரதிய மக்கள் ஐக்கிய கட்சியின் மாநில தலைவர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியிடமிருந்த கரும்பு விவசாயி சின்னத்தை பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த சின்னத்தோடு அந்த கட்சி தற்போது தமிழ்நாடு லோக்சபா தேர்தலில் போட்டியிட முடிவெடுத்துள்ளதாம்.
கரும்பு விவசாயி சின்னத்தை கர்நாடகாவை சேர்ந்த கட்சிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கிய நிலையில், வரும் லோக்சபா தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு ‘கரும்பு விவசாயி’ சின்னத்தை ஒதுக்க வேண்டும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடிதம் எழுதி இருந்தார். அதேபோல் உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்து இருந்தார். தமிழ்நாட்டில் சில நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்களையே அறிவித்துவிட்டார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். விரைவில் அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. வேட்பாளர்கள் பெயருடன், கரும்பு விவசாயி சின்னத்திற்கு ஓட்டு கேட்டு, நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை முதல் கட்சியாக நாம் தமிழர் கட்சி தொடங்கிவிட்டது. ஆனால் இப்படிப்பட்ட நேரத்தில்தான் அந்த கட்சியின் கரும்பு சின்னம் பறிபோய் உள்ளது. நாம் தமிழர் கட்சியின் அடையாளமாக கிட்டத்தட்ட மாறி இருந்த இந்த சின்னம் தற்போது கர்நாடகாவில் இருக்கும் கட்சிக்கு சென்றுவிட்டது.
டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடத்தப்பட்ட விசாரணையில் கூட, சீமானின் நாம் தமிழர் கட்சி என்பது தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சி இல்லை என்பதால், கரும்பு விவசாயி சின்னத்தை நிரந்தரமாக ஒதுக்கி தர வேண்டும் என அக்கட்சியால் கோர முடியாது என கூறியுள்ளது. உங்களுக்கு இந்த சின்னம் வேண்டும் என்றால் நீங்கள் முன்கூட்டியே தேர்தல் ஆணையத்திடம் கேட்டு இருக்க வேண்டும். அப்போது தாமதம் செய்துவிட்டீர்கள். இப்போது கேட்டு என்ன பலன். அதோடு இந்த சின்னம் உங்களுக்கு ராசியான சின்னம் போலவும் தெரியவில்லை என்று டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நாம் தமிழர் கட்சியிடமிருந்த கரும்பு விவசாயி சின்னத்தை பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த சின்னத்தோடு அந்த கட்சி தற்போது தமிழ்நாடு லோக்சபா தேர்தலில் போட்டியிட முடிவெடுத்துள்ளதாம். பாரதிய மக்கள் ஐக்கிய கட்சியின் மாநில தலைவர் ஜெயக்குமார் அளித்துள்ள பேட்டியில், தேர்தல் ஆணையம்தான் எங்களுக்கு சின்னத்தை பயன்படுத்த அனுமதி கொடுத்தது. அதனால் அதை பயன்படுத்துகிறோம். எங்கள் கட்சி சின்ன கட்சி என்கிறார். அவருடைய கட்சியும் சின்ன கட்சியாகவே தொடங்கியது. நாங்களும் வளருவோம். எங்களுடைய சின்னம் அவருக்கு வேண்டும் என்றால் எங்களுடன் கூட்டணி வைத்து எங்கள் சின்னத்தில் தம்பி சீமான் நிற்கட்டும். இது தேர்தல் ஆணையம் ஒதுக்கிய சின்னம். அதை நாங்கள் பெற்றுக்கொண்டோம். நாங்கள் இந்த சின்னத்தை அபகரிக்க வேண்டும் என்றெல்லாம் செய்யவில்லை. சீமான் எங்களுடன் கூட்டணி வைத்தால் விவசாயி சின்னத்தை தரத் தயாராக உள்ளோம். இல்லை என்றால் அவரை எதிர்த்து போட்டியிடுவோம். நாங்கள் பல மாநிலங்களில் போட்டியிட உள்ளோம், 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி போட்டி போட முடிவு செய்துள்ளது., தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளில் போட்டியிட உள்ளோம் என்று அறிவித்துள்ளார்.