மகளிர் உரிமைத் தொகை பற்றி குஷ்பு உள் அர்த்தத்துடன் சொல்ல வாய்ப்பில்லை: ஆளுநர் தமிழிசை

மகளிர் உரிமைத்தொகை தொடர்பாக குஷ்பு உள் அர்த்தத்துடன் சொல்ல வாய்ப்பில்லை என்றும் தவறாக சொல்லியிருக்க மாட்டார் என்றும் புதுச்சேரியின் துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி ராஜ்நிவாஸில் துணைநிலை ஆளுநர் தமிழிசை செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது:-

புதுச்சேரியில் காரைக்காலுக்கு பிரதிநிதித்துவம் தரும் வகையி்ல் அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சருக்கான துறைகள் பற்றி முதல்வர் முடிவு செய்வார். குடியுரிமை திருத்தச் சட்டம் புதுச்சேரியில் அமலாகுமா என்று கேட்கிறீர்கள். உண்மையில் மாநில அரசு முடிவு எடுக்கமுடியாது. இது மத்திய அரசின் திட்டம். யாருடைய குடியுரிமையையும் பறிப்பதல்ல. கொடுப்பதற்கான திட்டம். உலகில் எல்லா நாடுகளிலும் இருக்கிறது. சட்டப்படி இல்லாமல் யாரும் வந்து தங்கமுடியாது. சட்ட அனுமதியோடு தங்க முடியும். மத்திய உள்துறை அமைச்சர் தெளிவாக தெரிவித்துள்ளார். இதில் மாநில அரசுகளுக்கு வேலையில்லை. மத்திய அரசு முன்னெடுத்து செல்கிறது. இது நாட்டு மக்களுக்கு பாதுகாப்பானது.

முதலில் குடியுரிமை சட்டத்தை படியுங்கள். அதில் பிளவுப்படுத்துவே இல்லை. ஒரு நாட்டில் இருந்து சிறுபான்மையினர் வரும்போது அங்கீகாரம் தரப்படுகிறது. சிறுபான்மையினர் பாதுகாப்பாக இருக்கப் போகிறார்கள். முஸ்லிம் பெரியோர்கள் வரவேற்றுள்ளனர். அநாவசியமாக எதிர்க்காதீர்கள் என்று காஷ்மீரை சேர்ந்தோர் சொல்கிறார்கள். இது பிரிக்கும் திட்டமல்ல, ஒருங்கிணைக்கும் திட்டம். புதிய, பழைய அரசியல்வாதிகள் தெரியாமல் பேசுகிறார்கள்.

மகளிர் உரிமைத்தொகை தொடர்பான குஷ்பு கருத்தை பற்றி கேட்கிறீர்கள். குஷ்பு தவறாக சொல்லியிருக்க மாட்டார். பெண்கள் மீது அக்கறை கொண்டவர் அவர். உள்நோக்கத்தோடு சொல்லியிருக்க வாய்ப்பில்லை. உள் அர்த்தத்துடன் சொல்ல வாய்ப்பில்லை. மகளிர் உரிமைத் தொகை பெண்களுக்கு பயன்படுகிறது. அரசு அவர்களை மதித்துதான் கொடுக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.