அதிமுக ஆட்சிக்காலத்தில் முஸ்லிம்கள் நிம்மதியாக இருந்தனர்: எடப்பாடி பழனிசாமி

அதிமுக ஆட்சிக்காலத்தில் முஸ்லிம்கள் நிம்மதியாக இருந்தனர். ஆனால் திமுக ஆட்சிக்காலத்தில் தினம் தினம் முஸ்லிம்கள் துன்பப்படுகிறார்கள் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

இஸ்லாமியர்களுக்கு எதிரானதாக கூறப்படும் சிஏஏ சட்டத்தை மோடி தலைமையிலான மத்திய அரசு நாடு முழுவதும் நேற்று முன்தினம் திடீரென அமல்படுத்தியது. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், இந்த நடவடிக்கையை மத்திய அரசு எடுத்திருப்பது பெரும் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை சிஏஏ சட்டத்துக்கு பாஜகவை தவிர திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் எதிராக தான் உள்ளன. ஆனால், இந்த சட்டம் நாடாளுமன்றத்தில் கடந்த 2019-ம் ஆண்டு நிறைவேறிய போது, அதற்கு ஆதரவாக அதிமுக உறுப்பினர்கள் வாக்களித்திருந்தனர். பாஜகவுடன் அப்போது கூட்டணியில் இருந்ததால் சிஏஏவுக்கு அதிமுக ஆதரவு அளித்தது. இதனை சுட்டிக்காட்டி திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அதிமுகவை விமர்சித்து வருகின்றன.

இந்நிலையில், சென்னை எழும்பூரில் அதிமுக சார்பில் இப்தார் நோன்பு துறக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தலையில் குல்லாவுடன் கலந்து கொண்ட எடப்பாடி பழனிசாமி, நோன்பு கஞ்சியை பருகி, மற்ற இஸ்லாமிய மக்களுக்கும் நோன்பு துறப்பதற்கான உணவுப் பொருட்களை வழங்கினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

தமிழ்நாட்டை பொறுத்தவரை முஸ்லிம்களுக்கும், சிறுபான்மையினருக்கும் அரணாக இருக்கும் ஒரே இயக்கம் அதிமுக தான். இதை யாராலும் மறுக்க முடியாது. திமுக ஆட்சியில் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், அதிமுக ஆட்சி காலத்தில் சட்டம் ஒழுங்கு பேணிக் காக்கப்பட்டு, அனைத்து தரப்பு மக்களும் பாதுகாக்கப்பட்டனர். குறிப்பாக சிறுபான்மையின மக்கள் மகிழ்ச்சியாகவும், பாதுகாப்பாகவும் இருந்தனர். ஆனால் இப்போது திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்கள் நிம்மதி இல்லாமல் இருக்கிறார்கள். தினம் தினம் துன்பப்படுகிறார்கள்.

இந்த நிலை மாற வேண்டுமென்றால், அமைதி நிலை திரும்ப வேண்டுமென்றால், இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அனைவரும் ஒற்றுமையுடன் பணியாற்றி அதிமுகவை அமோக வெற்றி பெற செய்ய வேண்டும். தீய சக்திகளை தோல்வியடைய செய்ய வேண்டும். சாதி, மதத்திற்கு அப்பாற்பட்ட இயக்கம் தான் அதிமுக. அதனால்தான் எங்கள் அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் என்ற ஒரு இஸ்லாமியர் இருக்கிறார்.

அராஜக வழியில் செல்பவர்களை விட நல்வழியில் சென்றால் தான் உண்மையான வெற்றி கிடைக்கும். இன்றைக்கு பாஜகவும், அதிமுகவும் கள்ள உறவு வைத்திருப்பதாக ஸ்டாலின் கூறுகிறார். அதிமுகவுக்கு எப்போது நேர் வழிதான் பிடிக்கும். குறுக்கு வழியிலும், கள்ள உறவிலும் ஒருபோதும் அதிமுக செல்லாது. திமுக யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைக்கட்டும். நாங்கள் மக்களுடன் கூட்டணி வைத்துள்ளோம். அதுதான் பலமான கூட்டணி. இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.