நாடு முழுவதும் ஒரே நேரத்தில் மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தல்களை நடத்துவது தொடர்பாக ஆராய அமைக்கப்பட்ட ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு தனது அறிக்கையை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் இன்று வழங்கியது.
நாடாளுமன்ற மக்களவை, மாநில சட்டப்பேரவைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து ஆராய்வதற்காக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்த தலைமையில் உயர்நிலை குழு அமைக்கப்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் 2-ம் தேதிஅமைக்கப்பட்ட இக் குழுவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மாநிலங்களவை முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், முன்னாள் நிதிக்குழு தலைவர் என்.கே. சிங், முன்னாள் மக்களவை பொதுச் செயலாளர் குபாஷ் காஷ்யப், மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர். சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் சிறப்பு அழைப்பாளராக அறிவிக்கப்பட்டார்.
தேசிய மற்றும் மாநில கட்சிகளின் பிரதிநிதிகள், சட்ட நிபுணர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரிடம் இருந்து இக்குழு ஆலோசனைகளை பெற்றது. 191 நாட்கள் இதற்கான ஆய்வுப் பணிகளை மேற்கொண்ட ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு, ஆய்வின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட 18,626 பக்கங்கள் கொண்ட அறிக்கையை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் இன்று வழங்கியது. இதற்காக, ராம்நாத் கோவிந்த தலைமையிலான குழுவினர், குடியரசுத் தலைவரை சந்தித்தனர்.
முன்னதாக, இந்தக் குழுவில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி சேர்க்கப்பட்டார். எனினும், அவர் இந்தக் குழுவில் உறுப்பினராக தொடர விரும்பவில்லை என தெரிவித்துவிட்டு வெளியேறிவிட்டார். ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்துவதற்காகவே இந்த குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும், ஆலோசிப்பதற்காக அல்ல என்றும் அவர் குற்றஞ்சாட்டி இருந்தார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ஆய்வு செய்த 22-வது சட்ட ஆணையம், 2029-ம் ஆண்டு முதல் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்தலாம் என தனது பரிந்துரையை ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழுவிடம் அளித்தது.