17 வயது சிறுமி கொடுத்த புகாரின் பேரில், கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது பெங்களூர் சதாசிவம் நகர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பெங்களூரை சேர்ந்த 17 வயது சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எடியூரப்பா மீது 17- வயதே ஆன சிறுமி பாலியல் புகார் அளித்தது கர்நாடகாவில் மட்டும் இன்றி தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
முன்னதாக அந்த சிறுமி அளித்த பாலியல் புகாரில் கூறப்பட்டிந்ததாவது:-
கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி கல்வி தொடர்பாக உதவி கேட்டு தாயாருடன் எடியூரப்பா வீட்டிற்கு சென்றதாகவும் அப்போது தனக்கு எடியூரப்பா பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமி புகார் அளித்துள்ளார். தன்னை தனி அறைக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், இதை வெளியில் கூற வேண்டாம். உனக்கு தேவையான உதவிகளை செய்கிறேன். இதையும் மீறி வெளியே கூறினால் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று எடியூரப்பா மிரட்டியதாகவும் பாதிக்கப்பட்ட சிறுமி புகார் மனுவில் கூறியுள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் பெங்களூர் சதாசிவம் நகர் காவல் நிலையத்தில் எடியூரப்பாவிற்கு எதிராக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல பாலியல் தொந்தரவு குறித்த வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. எடியூரப்பா மீதான இந்த புகார் கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 81 வயதான எடியூரப்பா கர்நாடகாவின் முதல்வராக 4 முறை பதவி வகித்துள்ளார். இந்த நிலையில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் எடியூரப்பா கைது செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியது.
இது தொடர்பாக கர்நாடகா உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் கூறுகையில், “இந்த விவகாரத்தில் உண்மை அறியும் வரை எதுவும் சொல்ல முடியாது. ஏனென்றால் இது சென்சிட்டிவான விஷயம். இதில், முன்னாள் முதல்வர் சம்பந்தப்பட்டு இருக்கிறார். விசாரணை அறிக்கையை பொறுத்து தான் எதுவும் சொல்ல முடியும். இந்த விவகாரத்தில் அரசியல் இருப்பதாக தெரியவில்லை. சிறுமி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். விசாரணை நடத்தி வருகிறார்கள்” என்று கூறினார்.
இந்த நிலையில், தனக்கு எதிரான புகார் குறித்து எடியூரப்பா கூறியிருப்பதாவது:-
எனக்கு எதிராக ஒரு பெண் புகாரளித்து இருப்பதாக கேள்வி பட்டேன். ஒரு மாதத்திற்கு முன்பு இருக்கும். எனது வீட்டிற்கு முன்பாக அடிக்கடி வந்து கொண்டிருந்தனர். நான் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஒருநாள், அவர்கள் இருவரும் அழுவதாக எனக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து இருவரையும் அழைத்து என்ன நடந்தது என்று கேட்டேன். அப்போது தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டு விட்டதாக இரு பெண்களும் கூறினர். நான் போலீசாரை அழைத்து தேவையான உதவிகளை செய்யுமாறு கூறினேன். அதன்பிறகு எனக்கு எதிராகவே அவர்கள் பேச தொடங்கிவிட்டனர். அந்த பெண் நலமாக இல்லை என்று நான் நினைத்தேன். காவல் ஆணையர் இது குறித்து விசாரிக்க வேண்டும் என்று நான் அறிவுறுத்தினேன். ஆனால், தற்போது அதை ட்விஸ்ட் செய்து எனக்கு எதிராகவே வழக்கு பதிய வைத்து இருக்கிறார்கள். சட்டரீதியாக இதை அணுகுவேன். உதவி செய்ய போய் இப்படி எல்லாம் நடக்கும் என நான் நினைக்கவில்லை. அவர்களுக்கு கொஞ்சம் பணமும் கொடுத்து உதவினேன். இதில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. பெண் ஒருவர் புகாரளித்துள்ளார். நாங்கள் சட்ட ரீதியாக சந்திப்போம். இவ்வாறு அவர் கூறினார்.