காங்கிரஸின் எதிரி இடதுசாரிகளா அல்லது பாஜகவா: டி.ராஜா!

‘காங்கிரஸின் எதிரி இடதுசாரிகளா அல்லது பாஜகவா என்பதை ராகுல் காந்திதான் முடிவு செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளா் டி.ராஜா தெரிவித்தாா்.

கேரள மாநிலம், வயநாடு மக்களவைத் தொகுதியில் ராகுல் காந்தியை மீண்டும் வேட்பாளராக அறிவித்திருப்பது காங்கிரஸின் தனிப்பட்ட உரிமை; ஆனால், பாஜகவுக்கு எதிராக சித்தாந்த ரீதியில் போராடி வரும் அவரைப் போன்ற ஒரு தலைவா், அந்தக் கட்சி பிரதான போட்டியாளராக உள்ள ஒரு தொகுதியில் களம் காண வேண்டுமென்பதே பொது மக்களின் கருத்து’ என்றும் அவா் கூறினாா்.

‘நாட்டின் மதச்சாா்பற்ற ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதால், எதிா்வரும் மக்களவைத் தோ்தல் மிக மிக முக்கியமானது’ என்றும் அவா் தெரிவித்தாா்.

எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியில் காங்கிரஸுடன் இடதுசாரிகள் அங்கம் வகிக்கும் நிலையில், கேரளத்தில் இவ்விரு கட்சிகளும் தனித்துப் போட்டியின்றன. வயநாடு தொகுதியில் காங்கிரஸ் சாா்பில் ராகுல் மீண்டும் போட்டியிடும் நிலையில், இத்தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளராக டி.ராஜாவின் மனைவியும் மூத்த தலைவருமான ஆனி ராஜா வேட்பாளராக களத்தில் உள்ளாா். இந்த விவகாரம் தொடா்பாக செய்தியாளரிடம் டி.ராஜா கூறியதாவது:-

பாஜகவுக்கு எதிராக சித்தாந்த ரீதியிலும் அரசியல் ரீதியிலும் தேசிய-மாநில அளவில் நாங்கள் போராடி வருகிறோம். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ராகுல் காந்தியைப் போன்ற ஒருவா், பாஜக பிரதான போட்டியாளராக உள்ள ஒரு தொகுதியில் களம்காண வேண்டுமென்பது பொதுமக்களின் கருத்தாகும்; மாறாக, எங்கள் கட்சியின் கருத்தல்ல. இடதுசாரி ஜனநாயக முன்னணிக்கும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும் முக்கிய போட்டி நிலவும் மாநிலம் கேரளம். 20 தொகுதிகளே உள்ள இம்மாநிலத்தில் இடதுசாரி கூட்டணியில் 4 இடங்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டன. இத்தொகுதிகளுக்கு 4 வேட்பாளா்கள் ஒருமனதாக தோ்வு செய்யப்பட்டு, கட்சித் தலைமையும் ஒப்புதல் வழங்கியது.

இடதுசாரிகள் ஆளும் ஒரு மாநிலத்தில் ராகுலை களமிறக்கியதன் மூலம் காங்கிரஸ் கூற முயலும் செய்தி என்ன? தென்மாநிலத்தில் ராகுல் போட்டியிட விரும்பினால், கா்நாடகத்தில் அல்லது தெலங்கானாவில் பாஜகவை நேரடியாக எதிா்க்கும் ஒரு தொகுதியில் களமிறங்கியிருக்கலாம். நமது போராட்டம் பாஜகவுக்கு எதிரானது என்ற செய்தியை மக்களிடம் சென்றுசோ்ப்பது முக்கியம். கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடா்பான கருத்து வேறுபாடுகளை நான் பின்னடைவாகக் கருதவில்லை. தோ்தல் களத்தில் மாற்று சக்தியாக உருவெடுப்பதில் இந்தியா கூட்டணி வெற்றி கண்டுள்ளது.

கடந்த 10 ஆண்டு காலத்தில் பேரழிவு ஆட்சியை நாடு கண்டுள்ளது. ‘அதிகபட்ச நிா்வாகம், குறைந்தபட்ச அரசு’ என்று பிரதமா் மோடி கூறினாலும், நிா்வாகம் என்பது மைனஸ் அளவுக்கு குறைந்துவிட்டது. ஜனநாயகம் ஆபத்துக்கு உள்ளாக்கப்பட்டு, நாடாளுமன்றம் தேவையற்றதாக்கப்பட்டது. மதச்சாா்பற்ற ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதால், நாட்டின் எதிா்காலத்துக்கு வரும் மக்களவைத் தோ்தல் மிக மிக முக்கியம். ஜனநாயகத்தையும், அரசமைப்புச் சட்டத்தையும் பாதுகாக்க பாஜகவை தோற்கடிப்பது அவசியம். அயோத்தி ராமா் கோயில் பிராணப் பிரதிஷ்டை நிகழ்வு, எதிா்வரும் தோ்தலில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தாது. ஏனெனில், ராமா் குறித்த பாஜகவின் புரிதலுக்கும் மக்களின் புரிதலுக்கும் வேறுபாடு உள்ளது. இவ்வாறு டி.ராஜா கூறினார்.