குடியுரிமை திருத்தச் சட்டத்தில் மாநிலங்கள் தலையிட முடியாது: வானதி சீனிவாசன்

மத்திய அரசுக்கு உரிமையுள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தில் எந்த மாநிலங்களும் தனிப்பட்ட முறையில் தலையிட முடியாது என பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் எம்எல்ஏ கூறினார்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் வானதி சீனிவாசன் கூறியதாவது:-

கோவையில் நடந்த அரசு விழாவில் பிரதமரை தமிழக முதல்வர் தரக்குறைவாக விமர்சித்திருப்பது கண்டிக்கத்தக்கது. பாஜக தலைமையிலான மத்திய அரசு, முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியை விட தமிழகத்துக்கு அதிக திட்டங்களை கொடுத்துள்ளது. கூடுதலாக 11 மருத்துவக் கல்லூரிகள், தென் மாவட்டத்தின் வளர்ச்சிக்காக இரட்டை ரயில் பாதை, இஸ்ரோ ராக்கெட் ஏவுதளம் போன்ற பல திட்டங்களை மத்திய அரசு கொடுத்துள்ளது. கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற திமுக எம்பிக்கள் தமிழகத்துக்கு எந்த திட்டங்களையும் பெற்றுத்தரவில்லை.

பிரதமர் மோடிக்கு எதிரான அலையை ஏற்படுத்த திமுக முயற்சி செய்து வருகிறது. அந்த முயற்சி வெற்றி பெறாது. பிரதமர் நாடு முழுவதும் வளர்ச்சி இருக்க வேண்டும் என்ற வகையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். பிரதமர் தமிழகத்துக்கு வருகையால் பாஜகவின் வாக்கு சதவீதம் உயர்ந்து வருகிறது. போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்கள் திமுகவினரோடு நெருக்கமாக உள்ளனர். போதைப் பொருட்கள் புழக்கத்தால் தமிழகம் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாக நடைபெறும் மாநிலமாக மாறியுள்ளது.

திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது, தமிழகத்தில் எட்டு வழி சாலை திட்டம், நீட் தேர்வு என பல திட்டங்களை தடுக்க முயற்சி செய்தது. நாடு முழுவதும் ஏழை எளிய மாணவர்களின் கல்விக்கு உறுதுணையாக இருக்கக் கூடிய நவோதயா பள்ளியை தமிழகத்தில் செயல்படுத்த விடாமல் திமுக தடுத்து வருகிறது. மத்திய அரசுக்கு உரிமையுள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தில் எந்த மாநிலங்களும் தனிப்பட்ட முறையில் தலையிட முடியாது. எனவே குடியுரிமை சட்டத் திருத்தத்தில் ஒவ்வொரு மாநிலமும் தனிப்பட்ட முறையில் எந்த முடிவும் எடுக்க முடியாது. தமிழகத்தில் திமுகவை வீழ்த்திக் காட்டுவோம். இவ்வாறு அவர் கூறினார்.