தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டாலும் பொன்முடி அமைச்சராவதில் சிக்கல் எதுவும் இல்லை: அப்பாவு!

தேர்தல் தேதி அறிவிக்கப் பட்டாலும், அமைச்சராக பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பதில் பிரச்சினை இல்லை என்று சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு தெரிவித் தார்.

முன்னாள் அமைச்சர் க.பொன்முடிக்கு உயர் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட சிறைதண்ட னையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. இதனால், அவர் மீண்டும் திருக்கோவிலூர் தொகுதி எம்எல்ஏ ஆனார். இந்நிலையில், அவருக்கு மீண்டும் அமைச்சராகப் பதவிப்பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் ரவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். ஆனால், ஆளுநர் ஏற்கெனவே திட்டமிட்டபடி நேற்று காலை டெல்லி புறப்பட்டுச் சென்றார். அங்கு அவர், அமைச்சர் பதவிப் பிரமாணம் செய்வது தொடர்பாக சட்டரீதியாக ஆலோசனை நடத்த உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தச்சூழலில், பேரவைத் தலைவர் மு.அப்பாவு தூத்துக்குடி செல்வதற்காக நேற்று சென்னை விமான நிலையம் வந்தார். அவரிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்ததாவது:-

பொன்முடிக்கு அமைச்சராகப் பதவிப்பிரமாணம் செய்வதைத் தவிர்க்க ஆளுநர் டெல்லி சென்றாரா என்பது தெரியவில்லை. அவ்வாறு சென்றிருக்க மாட்டார் என நம்புகிறேன். ஏற்கெனவே திட்டமிட்ட பணிகள் இருக்கும் பட்சத்தில் அவர் சென்றிருக்கலாம். டெல்லியில் இருந்து வந்தபின், பொன்முடிக்கு அமைச்சராகப் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார் என நம்புகிறேன்.

அதேபோல், மக்களவைத் தேர்தல் அறிவிப்புக்கும், பொன்முடி அமைச்சர் பதவியேற்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. முதல்வர் யாரை அமைச்சராக நியமிக்க வேண்டும் என்று பரிந்துரைத்து ஆளுநருக்கு கடிதம் அனுப்புகிறாரோ அவரை அமைச்சராக ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைப்பதே நடைமுறை. இதில் சிக்கல், கஷ்டம் எதுவும் இருக்காது. அதேபோல், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போது, அமைச்சர் பதவியேற்பில் எந்தவித சட்டச்சிக்கலும் இருக்காது என்ற நம்பிக்கை உள்ளது.

ஏற்கெனவே, நடத்தை விதிகள் அமலில் உள்ளபோது, ராஜஸ்தானில் ஒருவர் அமைச்சராகப் பதவியேற்ற முன்னுதாரணம் உள்ளது. அதேபோல் பொன்முடி அமைச்சராகலாம். நாட்டில் ஒரு மாநிலத்தில் உள்ள நடைமுறைதான் மற்ற மாநிலங்களுக்கும் பொருந்தும் என்பதால், பொன்முடி பதவியேற்பதில் சிக்கல் இல்லை. இவ்வாறு அப்பாவு கூறினார்.