அரசியலில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ’ஒரு கத்துக்குட்டி’ என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார்.
அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமியை அரைவேக்காடு என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்த நிலையில், அதிமுகவை சேர்ந்த முன்னாள் செல்லூர் ராஜூ அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்துள்ளார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜூ கூறியதாவது:-
தமிழ்நாட்டில் அரைவேக்காடு யாரென்று கேட்டால் அனைவருக்கும் தெரியும். அது அண்ணாமலைதான். நாட்டில் ஆளுங்கட்சியின் மாநிலத் தலைவர் என்கிற மமதையில், மறைந்த தலைவர்களை மதிக்காமலும், அவர்களை குறைத்து மதிப்பிட்டும் பேசுவது என அண்ணாமலையுடைய நிலைப்பாடுகளை பார்க்கும்போது, நிஜமாகவே அரைவேக்காட்டுத்தனமாகத் தான் தெரிகிறது.
அண்ணாமலைக்கு அரசியலில் என்ன தெரியும்? அரசியலில் அண்ணாமலை ’ஒரு கத்துக்குட்டி’. ஆளுங்கட்சியினர் பணத்தைக் காட்டி கூட்டத்தை திரட்டினால் போதுமா? வாக்குப் பெட்டியை உடைக்கும்போது தான், பாஜகவுக்கு மக்கள் என்ன ஆப்பு வைத்துள்ளனர்? என்று தெரியும்.அதன்பிறகு அண்ணாமலை தொடருவாரா என்பதும் தெரியும்.
ஒரு அரசியல் கட்சி என்பது அனைத்து சமூகங்களையும் மதங்களையும் அரவணைத்துப் போக வேண்டும். ஆனால் பாஜக ஒரு மதத்தை மட்டும் முன்னிறுத்துவது தான், இன்று அனைவருடைய மன வேதனையாக உள்ளது.
பிரதமர் மோடிக்கு வந்தது தானா சேர்ந்த கூட்டமா? அழைத்து வரப்பட்ட கூட்டம். கூட்டத்தை பார்த்ததும், அண்ணாமலை மிதப்பில் பேசியுள்ளார். இதைப் போல பேசுபவர்க்கெல்லாம் தமிழக மக்கள் நல்ல பதில் அளிப்பார்கள். அது தேர்தல் முடிந்த பின்னர் தெரியும்.
முன்னாள் முதலமைச்சரை தரக்குறைவாகப் பேசியதை வன்மையாகக் கண்டிக்கிறோம். இன்னொரு முறை அவர் இப்படி பேசினால் சரியாக வாங்கிக் கட்டிகொள்வார். அண்ணாமலைக்கு அரசியல் தகுதியே இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.