லோக்சபா தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், தேர்தலை எதிர்கொள்ள தயார் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்தியாவின் லோக்சபா தேர்தல் குறித்த தேதியை, இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும். முதல்கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இரண்டாம் கட்டம் ஏப்ரல் 26ம் தேியும், மூன்றாம் கட்டம் மே 7ம் தேதியும், 4ம் கட்டம் மே 13ம் தேதியும், 5ம் கட்டம் மே 20, 6ம் கட்டம் மே 25, 7ம் கட்டம் ஜூன் 1ம் தேதியும் நடைபெறுகிறது. லோக்சபா தேர்தலில் வாக்களிக்க 96.88 கோடி வாக்காளர்கள் தகுதியானவர்கள் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது கடந்த 2019ம் ஆண்டின் வாக்காளர்களை விட 6 சதவிகிதம் அதிகமாகும். 49.7 கோடி ஆண் வாக்காளர்கள், 47 கோடி பெண் வாக்காளர்கள் இந்த லோக்சபா தேர்தலில் வாக்களிக்க தகுதியானவர்கள் என்று அடையாளம் காணப்பட்டிருக்கிறது.
மொத்த வாக்காளர்களில் 19.74 கோடி பேர் இளைஞர்களாக இருக்கின்றனர். இதில் 1.8 கோடி இளைஞர்கள் முதல் தலைமுறை வாக்காளர்களாவார்கள். தேர்தலுக்காக 1.50 கோடி தேர்தல் பணியாளர்கள் பணியாற்ற இருக்கின்றனர். வாக்குப்பதிவுக்காக 55 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதேபோல வாக்காளர்களுக்காக ஒவ்வொரு மையத்திலும், குடிநீர், கழிவறை, சக்கர நாற்காலி, உதவி மையம், போதுமான வெளிச்சம் போன்ற வசதிகள் செய்யப்படும்” என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் தேர்தலை எதிர்கொள்ள தயார் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில், “மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான 2024 லோக்சபா தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கிறது. பாஜக-என்டிஏ கூட்டணி தேர்தலை எதிர்கொள்ள தயாராக இருக்கிறது. நல்லாட்சி மற்றும் அனைத்து துறைகளிலும் சிறப்பான செயல்பாடுகள் மூலம் நாங்கள் மக்களிடம் சென்றிருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.