40 லோக்சபா தொகுதிகளிலும் போட்டியிட விரும்புகின்றவர்கள் தேர்தல் விருப்ப மனுக்களை அளிக்கலாம் என்று தேமுதிகவின் பிரேமலதா அறிவித்துள்ளார். இதனால் இந்த லோக்சபா தேர்தலில் தேமுதிகவும் தனித்து போட்டியிட போவதாக தெரிகிறது. இ
லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது. தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதேபோல் விளவங்கோடு சட்டமன்றத்துக்கும் அதே நாளில் தேர்தல் நடக்கிறது. தேர்தலுக்கு சரியாக ஒரு மாதம் தான் இருப்பதனால் தமிழக அரசியல் களம் தற்போது சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில், இதுவரை யாருடனும் கூட்டணியை உறுதிப்படுத்தாத தேமுதிக 40 தொகுதிகளிலும், கழகத்தின் சார்பில் போட்டியிட விரும்புகின்ற அனைத்து நிர்வாகிகளும், கழகத் தொண்டர்களும் நாடாளுமன்ற தேர்தல் விருப்ப மனுக்களை அளிக்கலாம் என்று பிரேமலதா கூறியுள்ளார்.
இது தொடர்பாக தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பதினெட்டாவது 2024 நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்ற தொகுதிகளில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் போட்டியிட விரும்புகின்ற அனைத்து நிர்வாகிகளும், கழகத் தொண்டர்களும் நாடாளுமன்ற தேர்தல் விருப்ப மனுக்களை 19.03.2024 செவ்வாய்க் கிழமை அன்று காலை 11.00 மணியில் இருந்து சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை 20.03.2024 புதன்கிழமை மாலை 5 மணிக்குள் தலைமை கழகத்தில் ஒப்படைக்க வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலில் கழகத்தின் சார்பில் போட்டியிடுவதற்குரிய விருப்ப மனு அளிப்பதற்கு தேமுதிகவின் நிர்வாகிகளாக இருப்பவர்களும், கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இருப்பவர்களும் தகுதியானவர்கள் ஆவர்.
மேலும், நாடாளுமன்ற பொது தொகுதிக்கான விருப்ப மனு கட்டணமாக ரூபாய் 15 ஆயிரமும், தனித் தொகுதிக்கான விருப்ப மனு கட்டணமாக ரூபாய் 10 ஆயிரமும் செலுத்தி விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம். நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு 21.03.2024 வியாழக்கிழமை அன்று காலை 10 மணி அளவில் தலைமை கழகத்தில் நேர்காணல் நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அதிமுக மற்றும் பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்திய தேமுதிக ஒரு ராஜ்யசபா சீட் கேட்டதாக தெரிகிறது. ஆனால் பாஜவும், அதிமுகவும் ராஜ்யசபா சீட் கொடுக்க சம்மதம் தெரிவிக்கவில்லையாம். இதுபோக அதிமுக 3 லோக்சபா தொகுதி மட்டுமே தருவதற்கு சம்மதித்ததாகவும் இதனால் தேமுதிக கூட்டணியை அறிவிக்காமல் இருந்து வருகிறது. இந்த நிலையில் இன்று அதிமுக – தேமுதிக கூட்டணி தொடர்பாக இன்று அரை மணி நேரம் பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்படுகிறது. அதிமுக தலைவர்கள் கே.பி.முனுசாமி, எஸ்.பி. வேலுமணி, தங்கமணி ஆகியோர் தேமுதிக நிர்வாகிகள் உடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதில், தேமுதிக கேட்கும் தொகுதிகளை ஒதுக்க அதிமுக தயக்கம் காட்டுவதால் இழுபறி ஏற்பட்டு உள்ளதாம். 3 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க அதிமுக சம்மதிப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. மொத்தமாக 7 தொகுதிகள் கேட்ட தேமுதிகவுக்கு 3 தொகுதிகள் ஒதுக்க அதிமுக. திட்டமிட்டுள்ளதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் வருகின்றன. இதற்கு தேமுதிகவும் சம்மதித்ததாக தகவல் வெளியான நிலையில் தான் தற்போது பிரேமலதா இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் திமுக தலைமையில் ஒரு கூட்டணியும், அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும், பாஜக தலைமையில் ஒரு கூட்டணியும், நாம் தமிழர் கட்சி தனித்தும் என 4 முனை போட்டி நிலவும் என்று கருதப்படுகிறது. இதில் திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி யார் யாருக்கு எத்தனை தொகுதி என்பதை முடிவு செய்துவிட்டது. தொடர்ந்து தொகுதி பங்கீடு தொடர்பாக தீவிரமாக ஆலோசித்து வருகிறது. அதிமுகவை பார்த்தோம் என்றால், பாஜகவுடன் கூட்டணியே கிடையாது என்று திட்டவட்டமாக அறிவித்து இருப்பதால், தேமுதிக மற்றும் பாமகவுடன் கூட்டணி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இது தொடர்பாக தேமுதிக மற்றும் பாமகவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படும் நிலையில், தேர்தல் தேதி அறிவித்த பிறகும் இன்னமும் முடிவு உறுதி செய்யப்படவில்லை.
இதேபோல் பாஜகவும் தங்களது தலைமையில் ஒரு கூட்டணியை அமைத்து தேர்தலை சந்திப்போம் என்று கூறி வருகிறது. பாஜகவும் பாமக மற்றும் தேமுதிகவுடன் கூட்டணி குறித்து பேசி வருகிறது. சரத்குமார் பாஜகவுடன் தனது கட்சியை இணைத்துள்ளார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் டிடிவி தினகரனும் பாஜகவுக்கு நிபந்தனையில்லா ஆதரவை அளிப்பதாக கூறியுள்ளார். ஓ பன்னீர் செல்வமும் பாஜகவுடன் கூட்டணி என்று கூறி வருகிறார்.