அதிமுகவுக்கு மருதநாட்டு மக்கள் கட்சி முழு ஆதரவு!

லோக்சபா தேர்தல் விரைவில் நடைபெறும் நிலையில், மருத நாட்டு மக்கள் கட்சி அதிமுகவுக்கு தங்கள் முழு ஆதரவை அளிப்பதாக அறிவித்துள்ளனர்.

இந்தியாவில் இன்னும் சில வாரங்களில் லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் தொடர்பான அறிவிப்பைத் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் நேற்று வெளியிட்டார். மொத்தமாக ஏழு கட்டமாகத் தேர்தல் நடக்கும் நிலையில், இதில் தமிழ்நாட்டில் முதல் கட்டத்திலேயே தேர்தல் நடைபெறுகிறது. இன்னும் சுமார் 4 வாரங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், இங்கே அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்கள் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்த லோக்சபா தேர்தலில் தேசியளவில் பாஜகவுக்கும் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கும் இடையே தான் போட்டி இருக்கிறது. அதேநேரம் தமிழ்நாட்டில் திமுக கூட்டணிக்கும் அதிமுக கூட்டணிக்கும் இடையே தான் பிரதான போட்டி இருக்கிறது. இதில் திமுக கூட்டணி ஏற்கனவே தொகுதிப் பங்கீடு வரை அனைத்தையும் முடித்துவிட்டன. அங்கே கூட்டணியில் இருக்கும் சில கட்சிகள் வேட்பாளர்களைக் கூட அறிவித்துவிட்டன. இருப்பினும், அதிமுக கூட்டணியில் நிலைமை அப்படி இல்லை. கூட்டணி பேச்சுவார்த்தையே முடியாமல் இருந்தது. லோக்சபா தேர்தல் குறித்த அறிவிப்பு வந்ததும் கூட்டணியை அறிவிப்போம் என்பதே அதிமுக தலைவர்களின் பதிலாக இருந்தது. இப்போது லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், கூட்டணி குறித்த நடவடிக்கைகளை அதிமுக தீவிரப்படுத்தியுள்ளன.

இதற்கிடையே லோக்சபா தேர்தலில் அதிமுகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக மருத நாட்டு மக்கள் கட்சி அறிவித்துள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்த மருத நாட்டு மக்கள் கட்சி நிர்வாகிகள் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்தன. தேர்தல் நெருங்க நெருங்க மேலும் பல கட்சிகள் அதிமுகவுக்கு ஆதரவு அளிக்கும் என்று அதிமுக தலைவர்கள் கூறியுள்ளனர்.

சென்னை, பசுமைவழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் இன்று ஞாயிறுக் கிழமை மருதநாட்டு மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் திரு. பனை. ராஜ்குமார் அவர்கள் தலைமையில், அக்கட்சியின் செயலாளர் திரு. செல்லபாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் நேரில் சந்தித்து, கழகத்திற்கு தங்களது கட்சியின் முழு ஆதரவை தெரிவித்துக் கொண்டனர். அதற்கு கழகப் பொதுச் செயலாளர் அவர்கள் தமது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.