நாங்கள் ஒருபோதும் தரம் தாழ்ந்து விமர்சிப்பவர்கள் அல்ல: வானதி சீனிவாசன்

“நாங்கள் ஒருபோதும் தரம் தாழ்ந்து விமர்சிப்பவர்கள் அல்ல. ஆனால் பிரதமரை விமர்ச்சிப்பவர்களுக்கு தக்க பதிலடி தரப்படும்” என பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

கோவை சித்தா புதூர் பகுதியில் பாஜக அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களிடம் வானதி சீனிவாசன் கூறியதாவது:-

பிரதமர் மோடியின் கோவை வருகை கட்சியினர் மட்டுமின்றி மக்களாலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. மோடியின் ‘ரோட் ஷோ’ பிரம்மாண்ட முறையில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. நாளை மாலை 5.30 மணிக்கு சாய்பாபா காலணி பகுதியில் தொடங்கும் பேரணி, 3 கி.மீ. கடந்து ஆர்.எஸ்.புரம் பகுதியில் நிறைவடையும். நிகழ்வில் பங்கேற்க கட்டுப்பாடுகள் இல்லை. பாஸ் தேவையில்லை. நிகழ்வில் பங்கேற்க விரும்பும் மக்கள் 2 மணிக்கு முன் வர வேண்டும்.

தேர்தல் தேதி அறிவிப்பில் கூட காங்கிரஸ், திமுக விமர்சனம் செய்கின்றனர். தேர்தல் ஆணையத்தின் மீது பழி போடுவது தேர்தலுக்கு முன்பே தோல்வியை அவர்கள் ஒப்புக் கொள்வதாக நாங்கள் பார்க்கிறோம். பிரதமர் மோடியை 28 பைசா என்று அழைக்க வேண்டுமென உதயநிதி கூறியுள்ளார். ஜாபர் சாதிக்குடன் தொடர்பில் இருந்த உதயநிதியை ட்ரக் உதயநிதி என அழைக்கலாமா. நாங்கள் ஒருபோதும் தரம் தாழ்ந்து விமர்சிப்பவர்கள் அல்ல. ஆனால் பிரதமரை விமர்ச்சிப்பவர்களுக்கு தக்க பதிலடி தரப்படும்.

தமிழகத்திற்கு யு.பி.ஏ அரசாங்கம் கொடுத்ததை விட அதிகமான நிதியை மோடி வழங்கியுள்ளார். பா.ஜ.க ஆளும் மாநிலங்களை விட தமிழகத்திற்கு அதிகமான சிறப்பு திட்டங்களை பிரதமர் தந்துள்ளார். பத்து ஆண்டுகளாக பிரதமர் மோடி சிறப்பான‌ ஆட்சி தந்துள்ளார். தமிழகத்தில் கூட்டணியை நிறைவு செய்யும் பணிகளில் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். சேலத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் பங்கேற்கிறார்கள்.

ஒரே கட்டமாக ஏன் தேர்தல் நடத்தவில்லை என்ற கமல்ஹாசன் கூறியுள்ளார். அவர் நடைமுறை எதார்த்தம் புரியாதவர். மக்களை சந்திக்காமல் ராஜ்ய சபா சீட் பெற்றுள்ளார். தேர்தல் பத்திரம் என்பது கருப்பு பண புழக்கத்தை ஒழிக்கவும், அரசியல் கட்சிகளுக்கு பெரிய அளவு நிதி அளிப்பதை தடுக்கவும் மோடி அறிமுகப்படுத்தினார். பாஜக வை விமர்சனம் செய்பவர்கள் மாநில கட்சி வாங்கியதை ஏன் விமர்சனம் செய்யவில்லை. வெளிப்படைத் தன்மை உள்ள அரசு மீது கலங்கம் ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.