நிவாரணத் தொகை தருவது பிச்சையா?: நிர்மலா சீதாராமனுக்கு திமுக கண்டனம்!

நிவாரணத் தொகையை பிச்சை எனக் குறிப்பிட்டது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி மிக்ஜாம் புயல் காரணமாக ஒரே நாளில் பெய்த அதி கனமழையால் சென்னையே வெள்ளத்தில் சூழ்ந்தது. அதேபோல டிசம்பர் 17, 18 ஆகிய தேதிகளில் தென்மாவட்டங்களில் பெய்த அதிதீவிர கனமழையால் நெல்லை, தூத்துக்குடி வெள்ளக்காடானது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு 6000 ரூபாய் நிவாரண உதவி வழங்கியது. அத்துடன், வீடு இழந்தோர், வீடு சேதமடைந்தவர்கள், கால்நடைகளை இழந்தவர்கள் என தகுதிக்கு ஏற்ற வகையில் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது. எனினும், மத்திய அரசு தமிழகத்திற்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து பணம் தரவில்லை என திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இந்த நிலையில் சென்னையில் நேற்று நடந்த சாணக்யா ஊடக விழாவில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், எப்போதும் மற்றொருவர் போட்ட பிச்சையில் நாம் வாழத் தேவையில்லை என்றும், வெள்ளத்திற்கு ஆயிரம் ரூபாய் நிவாரணம், வீடு இடிந்து விழுந்தால் 500 ரூபாய் நிவாரணம் என்று சில கட்சிகள் மக்களை டீல் செய்வதாகவும், இந்த கட்சிகள் ஆட்சியில் இருந்தால் நாடு முன்னேறாது என்றும் காட்டமாக விமர்சனம் செய்தார்.

வெள்ள நிவாரணத்தை பிச்சைக் காசு என நிர்மலா சீதாராமன் தெரிவித்துவிட்டதாக சர்ச்சைகள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக திமுக ஐடி விங் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “நாட்டை அதிரவைத்துள்ள தேர்தல் பத்திர ஊழல் குறித்து வாய் திறக்காத, தமிழ்நாட்டிற்கான பேரிடர் நிவாரண நிதி அளிக்காத ஒன்றிய அரசின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், எளிய மக்களின் வரிப் பணத்தால், அவர்களுக்காக மாநில அரசால் செய்யப்படும் நலத்திட்டங்களை, பேரிடர் நிவாரணங்களை பிச்சை என இழிவுபடுத்தியுள்ளார்.
அர்ச்சகர்களை அரசு வஞ்சிப்பதைப் போன்ற பொய் சித்திரத்தை ஏற்படுத்த, திருக்கோயில் உண்டியலில் காணிக்கை செலுத்தாதீர்..கவனமா தட்டிலே போடுங்கோ என்றவரிடம் என்ன எதிர்பார்க்க முடியும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளது.

இதேபோல அமைச்சர் மனோ தங்கராஜ், “பட்டினியை அனுபவித்தவனுக்குதான் பசியின் கொடுமை புரியும். வெயிலின் கொடுமையைப் பார்த்தவனுக்குதான் கூரையின் அருமை தெரியும். மானம் மறைக்க கந்தல் ஆடை இல்லாதவனை இழிவாக பார்ப்பவர்களுக்கு ஏழையின் வறுமை புரியாது. நிர்மலா சீதாராமனின் ஆணவம் ஏழைகளை முன்னேற்றாது. வயிறார உணவு, ஒழுகாத கூரை வீடு, அடிப்படை வசதிகள், கல்வி, சுகாதாரம் போன்றவை அடிப்படை உரிமைகள் என்பதை தத்துவமாக கொண்ட சமதர்ம கொள்கையே திமுகவின் கொள்கை” என்று கூறியுள்ளார்.