ஒரே நாடு ஒரே தேர்தல் இருக்கட்டும்.. ஒரே நாடு ஒரே ‘நாள்’ தேர்தல் வெய்யிங்க: கார்த்தி சிதம்பரம்!

கார்த்தி சிதம்பரம் தேர்தல் பத்திர விவகாரம், தேர்தல் தேதி மற்றும் பிரதமர் மோடி தலைமையிலான அரசு போன்ற பல விஷயங்களை குறித்து பேசியுள்ளார். ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து அறிவித்தவர்கள் ஒரே நாடு ஒரே நாள் தேர்தலை நடத்த நமக்கு வசதிகள் இல்லையா என குற்றம் சாட்டியுள்ளார்.

திருப்பத்தூர் ஆம்பூரில் கார்த்திக் சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், தேர்தல் பத்திர விவகாரத்தில் இந்த பத்திரங்களை பெற்ற அரசியல் கட்சிகள் நிதி வாங்கியது செல்லுபடி ஆகாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன் அடிப்படையில் யார் யார் தேர்தல் பத்திரங்கள் வாங்கி இருக்கிறார்கள்? எவ்வளவு நிதிக்கான தேர்தல் பத்திரங்கள் கைமாற்றப்பட்டன? உள்ளிட்ட உண்மை நிலவரங்களும் வெளிவந்தபடி இருக்கிறது.

பாஜக பொருத்தவரையில் ஒரு கம்பெனியில் சோதனை செய்கிறார்கள். அந்த கம்பெனியிடமிருந்து நிதி திரட்டுகிறார்கள். இன்னொரு பக்கம் சில கம்பெனிகளுக்கு காண்ட்ராக்டை ஒதுக்குகிறார்கள். அவர்களிடமிருந்தும் தொகையை வாங்குகிறார்கள். சில கம்பெனிகள் தொடங்கி சில வாரங்களிலேயே பெரிய தொகையை பாஜகவிற்கு கொடுத்துள்ளது. இன்னும் சிலரோ லாபத்தைவிட அதிக நிதியை கொடுத்திருக்கிறார்கள். வருமான வரித்துறை, அமலாக்கத்துறை ஆகியவற்றை கையில் வைத்துக்கொண்டு பாஜக வசூல் செய்கிறது என்பது இதன்மூலம் தெள்ளத்தெளிவாக தெரிகிறது. இதனை ஓய்வுபெற்ற நீதிபதிகள் கொண்ட குழு அமைத்து விசாரணை செய்யவேண்டும்.

தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இது குறித்து பேசியபோது, ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது. ஒரே நாடு ஒரே தேர்தல் என பேசுகிறார்களே, இப்போது 5 முதல் 7 கட்டங்களில் தேர்தல் நடக்கிறதே. ஒரே நாள் ஒரே தேர்தல் என நடத்தலாமே. அதற்கு நம்மிடம் வசதிகளா இல்லை? என கேள்வி எழுப்பினார்.

மேலும், தேர்தல் தேதிகள் பிரதமர் மோடியின் டூர் பிளானை பொறுத்தே அமைக்கப்பட்டிருக்கிறது. அவர் எப்போது இருப்பார் எப்போது வெளியூர் செல்லுவார் உள்ளிட்ட விவரங்களை மோடியின் டிராவல் மேனேஜரிடம் பெற்றே இந்த தேர்தல் தேதி குறிக்கப்பட்டிருக்கிறது போல.. எனவும் குற்றஞ்சாட்டினார் கார்த்தி சிதம்பரம்.

வருகின்ற மக்களவை தேர்தலில் 400 தொகுதிகளில் வெற்றிபெறுவோம் என பாஜகவினர் கூறிவருகிறார்கள். இதுகுறித்து பேசிய கார்த்தி சிதம்பரம், கண்டிப்பாக பாஜக ஜெய்க்கலாம்.. ஆனால் ஈரான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஷ் என ஆயிரக்கணக்கான பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிட்டால், 400 தொகுதிகளை வென்று அவர்கள் ஜெயிக்கலாம் என பேசினார். மேலும், பாஜகவினர் பகல் கனவு காண்பதாகவும் கார்த்தி சிதம்பரம் விமர்சித்தார்.

பாஜக ஹிந்தி மற்றும் இந்துத்துவ அரசியல் கட்சி என்பது எல்லோருக்கும் தெரியும். இந்தி பேசாத மற்ற மாநிலங்களில் பாஜகவின் பாட்ஷா பலிக்காது என்கிறார் கார்த்தி சிதம்பரம்.