உச்சநீதிமன்றம் அனுப்பிய நோட்டீஸுக்கு பதிலளிக்காத யோகா மாஸ்டரும் பதஞ்சலி குழும தலைவருமான பாபா ராம்தேவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர் நீதிபதிகள். மேலும் பாபா ராம்தேவ் மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக் கூடாது? எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
யோகா மாஸ்டரான பாபா ராம்தேவ் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருபவர். கொரோனா பரவிய காலத்தில் கொரோனாவுக்கு மருந்து கண்டு பிடித்துவிட்டதாக கூறியதால் கடுமையாக விமர்சிக்கப்பட்டவர் பாபா ராம்தேவ். நீதிமன்றங்களாலும் அவர் கண்டிக்கப்பட்டார். இதனிடையே பாபா ராம்தேவின் பதஞ்சலி ஆயுர்வேத மருந்துகளுக்கான விளம்பரங்களில் தவறான தகவல்கள் இடம்பெறுவதை தடை செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், விளம்பரங்களில் தவறான தகவலைத் தரக் கூடாது என பாபா ராம்தேவை எச்சரித்தது. அத்துடன் இது தொடர்பாக பதிலளிக்க வேண்டும் எனவும் பாபா ராம்தேவுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஹிமா கோலி, அமானுல்லாஹ் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பாக பாபா ராம்தேவ் நிறுவனத்துக்கு எதிரான வழக்கு விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையின் போது, உச்சநீதிமன்றம் அனுப்பிய நோட்டீஸுக்கு பாபா ராம்தேவ் தரப்பு பதிலளிக்கவில்லை; விசாரணைக்கு ஒருநாள் முன்னதாகத்தான் பதில் மனு தாக்கல் செய்தது என சுட்டிக்காட்டப்பட்டது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், பாபா ராம்தேவ் மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக் கூடாது எனவும் கேள்விகள் எழுப்பினர். மேலும் இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணையின் போது பதஞ்சலி நிறுவனத்தின் பாபா ராம்தேவ், நிர்வாக இயக்குநர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா இருவரும் உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் எனவும் நீதிபதிகள் காட்டமான உத்தரவையும் பிறப்பித்துள்ளனர்.