தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக மோடி, நிர்மலா சீதாராமன் மீது திமுக புகார்!

பிரதமர் மோடி மற்றும் நிர்மலா சீதாராமன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது.

பாராளுமன்ற தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தியாவில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. அதன்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு முதல் கட்டமாக வரும் ஏப்ரல் 19ஆம் தேதியே தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தன.

இந்நிலையில், குழந்தைகளை எந்தவித தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்தக்கூடாது என்ற விதியை பாஜக மீறி இருக்கிறது. அதேபோல், தேர்தல் நன்னடத்தை 8 விதிகளின் படி மதத்தின் பெயரால் ஓட்டு கேட்கக் கூடாது என்ற விதியையும் நிர்மலா சீதாராமன் மீறி இருக்கிறார். இந்த சட்ட மீறல்களுக்காக, மோடி மற்றும் நிர்மலா சீதாராமன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது.

கடந்த 16-ம் தேதி ரங்கராஜ் பாண்டேவின் சாணக்யா ஊடக விழா நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், திமுகவை கடுமையாக விமர்சித்தார். அதில், “இந்த கூட்டத்தில் உள்ள பெரும்பாலானோர் இந்துக்கள். ஆனால், இந்து மதத்தையே ஒழிப்பேன் என்று கூறுவதையும், அதை டெங்கு, மலேரியாவுடன் ஒப்பிடுவதையும் என்ன சொல்வது.. இதை கூறியதற்கே நாம் சீறியிருக்க வேண்டாமா? எல்லா மதங்களையும் ஒழிப்பேன் எனக் கூற அவர்களுக்கு தைரியம் கிடையாது. ஆன்மீகத்திற்கு எதிரான எந்தக் கட்சியும் எதிர்க்கட்சியாகவோ அல்லது ஆளும் கட்சியாக வரக்கூடாது. நமது கோயிலையே அழிக்கக் கூடிய, நமது கோயிலையே சுரண்டி தின்னக்கூடிய, நமது மதத்தையே அழிப்பேன் என்று சொல்லக்கூடிய கட்சிக்கெல்லாம் ஏன் ஓட்டு போடுகிறீர்கள்” என்று பேசியிருந்தார்.

கோவையில் நடைபெற்ற பிரதமர் மோடியின் வாகன பேரணியில், பள்ளி சீருடை அணிந்த சில மாணவ-மாணவிகளும் மோடியை காண வரிசையாக நின்றனர். அவர்களுடன் ஆசிரியர்களும் இருந்ததாக கூறப்படுகிறது. தேர்தல் பிரசாரத்தில் பள்ளி மாணவர்களை ஈடுபடுத்தக்கூடாது என தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்திருக்கிறது. அதனையும் மீறி பிரதமர் மோடி நிகழ்ச்சியில் மாணவர்களை பங்கேற்கச் செய்துள்ளதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி உள்ளனர்.