பிரதமர் மோடி, எனக்கும் பாஜகவுக்கும், என்டிஏக்கும் தமிழக மக்கள் கொடுக்கும் ஆதரவை பார்த்து திமுகவின் தூக்கமே தொலைந்துவிட்டது என்று பேசினார்.
லோக்சபா தேர்தல் களம் தற்போது சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் தேர்தல் பிரசாரங்களை தொடங்கி விட்டனர். தேர்தலையொட்டி நாடு முழுவதும் பிரதமர் மோடி சூறாவளி சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். அந்த வகையில் இன்று சேலம் மாவட்டம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் நடைபெறும் பாஜகவின் பிரமாண்ட பிரசார பொதுக்கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி இன்று 1 மணியளவில் கலந்துகொண்டார். அப்போது பிரதமர் மோடி பாரத் மாதா கி ஜே.. பாரத் மாதா கி ஜே.. பாரத அன்னை வாழ்க.. என்று தமிழில் பேசி பேச்சை தொடங்கினார். பிரதமர் மோடி பேசியதாவது:-
எதிர்க்கட்சிகளுக்கு அழிவு தொடங்கி இருக்கிறது. இந்து தர்மத்திற்கு எதிராக இந்தியா கூட்டணி செயல்படுகிறது. மற்ற மதத்தினரை இந்தியா கூட்டணி விமர்சிப்பதே இல்லை. இந்து மதத்தை பற்றி விமர்சிக்கும் இந்தியா கூட்டணி வேறு மதத்தையோ, மற்ற மதத்தையோ பற்றி விமர்சித்து பேசுவதே இல்லை. இந்தியா கூட்டணியினர் செங்கோலை அவமதித்தவர்கள். எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்ட செங்கோலை பற்றி தவறாக பேசுகிறார்கள். இந்து மதத்தை அழிக்க நினைத்தவர்கள் தான் அழிந்துபோய் இருக்கிறார்கள். இந்து மக்களின் அடையாளத்தை நான் இருக்கும் வரை அழிக்க விடமாட்டேன். தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவதே எனது இலக்கு. சுப்பிரமணிய பாரதியார் போல நானும் பெண் சக்திக்காக போராடுவேன்.
திமுகவும் காங்கிரசும் பெண்களை எப்படியெல்லாம் இழிவுபடுத்தினார்கள் என்று கொஞ்சம் நினைத்து பாருங்கள். சட்டசபையில் ஜெயலலிதாவை இழிவுபடுத்தியவர்கள் தான் திமுகவினர். இதற்காக தான் பெண்களுக்கான மகளிர் உரிமை சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றும் போது அதனை அவர்கள் எதிர்த்தனர். தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பு கவலை அளிக்கிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. திமுகவும் காங்கிரசும் நாணயத்தின் இரண்டு பக்கங்கள். ஊழல் செய்வதையே குறிக்கோளாக கொண்டுள்ளன. ஜிகே மூப்பனாரை பிரதமராக்க விடாமல் தடுத்தனர். கொள்ளை அடிப்பதிலேயே திமுக குறியாக இருக்கிறது. மத்திய அரசு அனுப்பும் பணத்தை கொள்ளையடிப்பதையை திமுக குறிக்கோளாக கொண்டுள்ளது. தமிழகத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை பாஜக தொடங்கி வருகிறது. கூட்டணியில் புதிதாக இணைந்திருக்கும் அனைவருக்கும் நான் தலைவணங்குகிறேன். உங்கள் ஒவ்வொருவருடைய ஆதரவினால் நம் பாரதம் மேலும் வலுவடையும்.
பாரத அன்னை வாழ்க.. என்னுடைய தமிழ் சகோதர சகோதரிகளே வணக்கம்.. தமிழகத்தில் பாஜகவும் எனக்கும் கிடைக்கும் வரவேற்பை இந்தியாவே வியந்து பார்த்துக்கொண்டிருக்கிறது. பாஜகவுக்கும் என்டிஏ கூட்டணி கட்சிக்கும் கிடைக்கும் ஆதரவை பார்த்து திமுகவின் தூக்கமே போய்விட்டது. தமிழ்நாடு மக்கள் ஒரு முடிவு செய்துவிட்டார்கள். ஏப்ரல் 19 ஆம் தேதி விழுகின்ற ஓட்டு எல்லாம் பாஜகவுக்கு தான்.. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தான்.. தமிழக மக்கள் ஒரு முடிவை எடுத்துவிட்டனர். தமிழக மக்களின் ஆதரவால் இந்த முறை பாஜக கூட்டணி 400 ஐ தாண்டும். 400 தொகுதிகளில் பாஜக கூட்டணி வெற்றி பெற வேண்டும். கோட்டை மாரியம்மன் மண்ணிற்கு வந்திருப்பது பெருமையளிக்கிறது. ராமதாஸ், அன்புமணியின் அனுபவம் பாஜகவிற்கு உதவியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
சேலத்திற்கு மதியம் 1 மணியளவில் பிரதமர் மோடி வந்தடைந்தார். இதைத்தொடர்ந்து திறந்த வெளி வாகனத்தில், தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெறும் இடமான சேலம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டிக்கு வந்தடைந்தார். அப்போது பாஜக தொண்டர்கள் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். பிரதமர் மோடியும் தொண்டர்களை நோக்கி கையசைத்தபடி பிரசார பொதுக்கூட்ட மேடைக்கு வந்தார். அப்போது பிரதமர் மோடிக்கு மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள், நினைவுப்பரிசு அளித்தனர். இதேபோல் அன்புமணி ராமதாஸ் பிரதமர் மோடிக்கு சால்வை அணிவித்தார். அப்போது பிரதமர் மோடி அன்புமணி ராமதாசை கை குலுக்கு வரவேற்றார். இந்த கூட்டத்தில் பாஜக கூட்டணி தலைவர்களும் ஒரே மேடையில் அமர்ந்திருந்தனர். இந்த கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அமைச்சர் எல் முருகன், ஜிகே மணி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள். இதேபோல் இந்த பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், சரத்குமார், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் பங்கேற்றனர். இதற்காக பொதுக்கூட்டம் நடைபெறும் கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் 44 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட பந்தல் மற்றும் மேடை அமைக்கப்பட்டு இருந்தது.