தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக பிரேமலதா விஜயகாந்த் மீது கோயம்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது. 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதுமே நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டது. தேர்தல் நடத்தை விதிகளை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோல் தேர்தல் சமயத்தில் தமிழ்நாட்டில் வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதைத் தடுக்க தமிழ்நாடு முழுவதும் தேர்தல் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். தமிழ்நாட்டிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, முறையான ஆவணம் இன்றி கொண்டு செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக தேர்தல் அதிகாரி அளித்த புகாரின் பேரில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா மீது கோயம்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி, நேற்று மகளிர் தின கொண்டாட்ட நிகழ்ச்சி சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சரண்யா விஜய் எனும் எப்ராய்டிங் தையல் பயிற்சி நிபுணர் அளித்த 6 மாத இலவச பயிற்சியில் கலந்துகொண்டு பயிற்சியை நிறைவு செய்த, சுமார் 300 பெண்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து பயிற்சி பெற்ற பெண்கள் இந்த சான்றிதழை வாங்கி சென்றனர்.
முன்னதாக இந்த நிகழ்ச்சிக்கு கோயம்பேடு போலீஸ் நிலையத்தில் அனுமதி கேட்கப்பட்டிருந்தது. ஆனால் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் போலீசார் அனுமதி வழங்கவில்லை. ஆனால் அதையும் மீறி இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு இருக்கிறது. இதனால் போலீசார் தேமுதிக அலுவலகத்திற்கு வந்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளரிடம் நிகச்சியை எப்படி நடத்தலாம் என்று கேட்டுள்ளனர். அப்போது தேமுதிக நிர்வாகிகள் இது தேமுதிக கட்சி அலுவலகத்தில் தான் நடக்கிறது, இந்த நிகழ்ச்சியால் யாருக்கும் பாதிப்போ, பிரச்சினையோ இல்லை என்று போலீசாரிடம் தெரிவித்தனர்.
இதற்கிடையே நிகழ்ச்சியில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி பேனர் மற்றும் ஷாமியானா பந்தல் போடப்பட்டு இருந்தது. இது தொடர்பாக தேர்தல் அதிகாரி சத்யநாராயணன் கோயம்பேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா மற்றும் நிகச்சியை ஏற்பாடு செய்த காளிராஜ் மீது வழக்கு பதிவு செய்தனர்.