கோவையில், சாயிபாபா கோயிலில் இருந்து ஆர்.எஸ்.புரம் வரை வாகனப் பேரணி மேற்கொண்ட பிரதமர் மோடிக்கு, வழிநெடுகிலும் ஏராளமான தொண்டர்கள், பொதுமக்கள் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பிரதமர் மோடி நாடு முழுவதும் பல்வேறு நகரங்களுக்கு சென்று சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த ஆண்டு மட்டும் தமிழகத்தில் 5 முறைக்கு மேல் பயணம் மேற்கொண்டு, பல்வேறு நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்களில் பங்கேற்றார். இந்த சூழலில், கோவையில் பிரதமர் மோடி தலைமையில் பிரம்மாண்ட வாகனப் பேரணி நடத்த பாஜகவினர் முடிவு செய்தனர். அதன்படி, கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள சாயிபாபா கோயில் சந்திப்பில் இருந்து தொடங்கி ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தலைமை அஞ்சல் நிலையம் அருகே நிறைவடையும் வகையில் 2.5 கி.மீ. தூரத்துக்கு வாகனப் பேரணி நடத்த திட்டமிடப்பட்டது.
இதில் கலந்து கொள்வதற்காக, கர்நாடக மாநிலம் ஷிவமோகாவில் இருந்து விமானம் மூலம் நேற்று மாலை கோவை விமான நிலையத்துக்கு பிரதமர் மோடி வந்தடைந்தார். அவரை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்,பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், சட்டப்பேரவை பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் வரவேற்றனர். அதைத் தொடர்ந்து பிரதமர் மோடி,கார் மூலமாக அவிநாசி சாலை, சிவானந்தா காலனி வழியாக மேட்டுப்பாளையம் சாலையில் வாகனப் பேரணி தொடங்கும் இடத்துக்கு நேற்று மாலை வந்தடைந்தார். அங்கு ம்கட்சியினர் திரண்டு நின்று பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்டிருந்த திறந்த காரின் பின்பகுதியில் பிரதமர் மோடி ஏறினார். அண்ணாமலை, எல்.முருகன், வானதி சீனிவாசன் ஆகியோரும் பிரதமருடன் சென்றனர். திட்டமிட்டபடி, சாயிபாபா கோயில் சந்திப்பில் இருந்து மாலை 6 மணிக்கு பிரதமரின் வாகனப் பேரணி தொடங்கியது. வாகனம் மிக மெதுவாக ஊர்ந்து சென்றது. பேரணி தொடங்கிய இடத்தில் இருந்து முடியும் இடம் வரை சாலையின் இருபுறமும் தொண்டர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டிருந்தனர். அவர்கள் பிரதமர் வாகனத்தின் மீது மலர்களை தூவியபடி, ‘‘மோடிஜி.. மோடிஜி’’ என்று உற்சாக குரல் எழுப்பி பிரதமரை வரவேற்றனர். திரண்டிருந்த மக்களை நோக்கி கைகளை அசைத்தவாறும், இருகரம் கூப்பி வணக்கம் தெரிவித்தவாறும் பிரதமர் மோடி சென்றார். வழியில், நாகஸ்வரம், தப்பாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சாலையின் இருபுறமும் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக மேடை மீது கலைஞர்கள் நிகழ்த்திய பல்வேறு விதமான நிகழ்ச்சிகளையும் பார்வையிட்டவாறு பிரதமர் மோடி சென்றார். வாகனப் பேரணி மேட்டுப்பாளையம் சாலையில் இருந்து சிந்தாமணி ரவுண்டானா வழியாக, காமராஜபுரம் சிக்னலை கடந்து ஆர்.எஸ்.புரத்துக்குள் நுழைந்தது. டி.வி.சாமி சாலை – டி.பி.சாலை சந்திப்பில் உள்ள தலைமை அஞ்சல்நிலையம் அருகே இரவு 7.15 மணி அளவில் வாகனப் பேரணி நிறைவடைந்தது.
பேரணி தொடங்கிய இடத்தில் இருந்து முடியும் இடம் வரை சாலையின் இருபுறமும் ஏராளமான தொண்டர்கள், மக்கள் திரண்டிருந்து பிரதமரை உற்சாகத்துடன் வரவேற்றனர். பேரணி நிறைவடைந்த பகுதியில், அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம், முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், சட்டப்பேரவை பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பேரணி முடிந்த பிறகு, வாகனத்தில் இருந்து இறங்கிய பிரதமர், அஞ்சல் நிலையம் முன்பு, கோவை குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் புகைப்படங்களுடன் வைக்கப்பட்டிருந்த பதாகைக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். அப்போது, பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் உடன் இருந்தார். தொடர்ந்து 7.15 மணிக்கு பிரதமர் ஆர்.எஸ்.புரத்தில் இருந்து கார் மூலமாக புறப்பட்டு, ரெட்பீல்டு அருகே உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு (சர்க்கியூட் ஹவுஸ்) சென்று நேற்று இரவு தங்கினார். சேலம் கெஜல்நாயக்கன்பட்டியில் இன்று நடைபெறும் பாஜக பிரச்சார பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
இந்நிலையில் பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:-
1998 ல் நிகழ்ந்த கோயம்புத்தூர் தீவிரவாத குண்டுவெடிப்புகளை மறக்க முடியாது. இன்று இந்த நகரத்திற்கு வந்திருக்கும் போது, அந்த குண்டுவெடிப்புகளில் நம்மை விட்டுப் பிரிந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினேன். தமிழ்நாட்டின் தேர்தல் முடிவுகள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தப் போகிறது. எங்கள் கட்சி மாநிலம் முழுவதும் வலுவான சக்தியாக உருவாகி வருகிறது. இனி தி.மு.க.வை ஆதரிக்கும் மனநிலையில் மக்கள் இல்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.