பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க முடியாது என ஆளுநர் ஆர்.என். ரவி முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதிய நிலையில், பொன்முடிக்கு அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் ஆர்என் ரவிக்கு உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் பொன்முடி. திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் எம்எல்ஏவாக உள்ளார். கடந்த 2006-11 காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்த வழக்கில் அவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து உயர்கல்வி துறை அமைச்சராக இருந்த பொன்முடி தனது அமைச்சர் மற்றும் எம்எல்ஏ பதவியை இழந்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து பொன்முடி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என பொன்முடி சார்பில் உச்சநீதிமன்றத்தில் கோரப்பட்டது. ஆனால் உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை மட்டுமே மட்டுமே நிறுத்தி வைத்தது. இதையடுத்து அவர் மீண்டும் எம்எல்ஏவாக ஆனார். இதையடுத்து பொன்முடியை அமைச்சராக்க முதல்வர் ஸ்டாலின் சார்பில் ஆளுநர் ஆர்என் ரவிக்கு கடிதம் எழுதப்பட்டது. ஆனால் உச்ச நீதிமன்றம் தண்டையைத் தான் நிறுத்தி வைத்துள்ளது என்றும் குற்றவாளி இல்லை என்று கூறவில்லை. இதனால் அமைச்சராக்க முடியாது என கடிதம் எழுதினார்.
இந்நிலையில் தான்- ஆளுநர் ஆர்என் ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது. பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளதாவது:-
மாநிலத்தில் அமைச்சரவை நியமனம் செய்வதில் ஆளுநருக்கு என்று தனிப்பட்ட உரிமை இல்லை. அரசியலமைப்பின் 164(1) வது பிரிவின் படி முதலமைச்சர் தலைமையில் இயங்கும் அமைச்சரவையின் முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட வேண்டும். மேலும் அமைச்சர் நியமனங்களின்போது அவர்களின் தகுதியை ஆராய முதலமைச்சருக்கே உரிமை உள்ளது. தார்மீக அடிப்படையில் அல்லது வேறு சில காரணத்தினாலோ யார் அமைச்சராக இருக்க வேண்டும் என்பதை ஆளுநரால் தீர்மானிக்க முடியாது. ஆளுநர் என்பவர் முதலமைச்சரின் முடிவில் தலையிட முடியாது. ஆனால் ஆளுநர் மாநில அரசுக்கு போட்டியாக போட்டி அரசை நடத்த முயற்றசிக்கிறார். இதனால் பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்கவும், முதல்வர் அவருக்கு வழங்கும் துறைக்கு ஒப்புதல் வழங்கவும் ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும். ” என கூறப்பட்டு இருந்தது.
மேலும் மனுவை தாக்கல் செய்த பிறகு அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் ஏஎம் சிங்வி மற்றும் திமுக எம்பி பி வில்சன் ஆகியோர் தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட்டிடம் வாய்மொழியாக கோரிக்கை வைத்தனர். இந்த சமயத்தில் ஏஎம் சிங்வி, ‛‛இந்த ஆளுநருக்க எதிராக ஏற்கனவே உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது’’ என கூறினார். இதை கேட்ட தலைமை நீதிபதி டிஒய் சந்திரநாத், ‛‛விபரங்களை இ-மெயில் செய்யவும். அதனை பார்த்துவிட்டு முடிவு செய்கிறேன்’’ என்றார்.