2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக ஒரே அணியில் போட்டியிடும்: சசிகலா

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக ஒன்று சேர்ந்து ஒரே அணியில் போட்டியிடும் என்று பட்டுக்கோட்டை அருகே காதணி விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வி.கே. சசிகலா பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

பட்டுக்கோட்டை வட்டம் சீதாம்பாள்புரம் அருகே தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற காதணி விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திரும்பிய வி.கே. சசிகலா பத்திரிகையாளர் சந்திப்பின் போது கூறியதாவது,

என்னைப் பொறுத்தவரை மக்களவைத் தேர்தலில் வெற்றியைத் தீர்மானிப்பது மக்கள் தான். நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு அதிமுக என்பது என்ன என்று எல்லோருக்கும் புரியும், மூன்று அணியாக இருக்கின்ற அதிமுக ஒன்றாக இணைய வாய்ப்பு வந்ததாக நான் கருதுகிறேன்.

தமிழக அரசு தேர்தல் காரணம் சொல்லி எவ்வித ஆக்கப்பூர்வமான செயல்களிலும் ஈடுபடாமல் உள்ளது. தூத்துக்குடியில் துப்புரவு பெண் ஒருவர் கொல்லப்பட்டது வேதனை அளிக்கிறது. முதல்வர் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறை என்ன செய்து வருகிறது. ஆவின் பாலில் புழு, பூச்சி உள்ளது அரசு அதைத் தடுக்க தவறிவிட்டது. தமிழக அரசின் தற்போதைய கவனம் எப்படியாவது பொய் சொல்லி நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவது. ஜெயலலிதா ஆட்சியில் இதுபோன்ற எந்த தவறும் நடந்தது கிடையாது.

2026 தேர்தல் என்பது எங்களுக்கும் திமுகவும் நேரடி போட்டியாக இருக்கும் அந்த தேர்தலில் நான் யார் என்பதைக் காட்டுவேன் திமுக என்ன ஆகும் என்பதையும் கணித்து வைத்துள்ளேன். மத்தியில் எந்த ஆட்சி வரவேண்டும் என்று மக்கள் உணர்ந்து வாக்களிக்க வேண்டும் அதாவது இதுவரை ஆட்சி செய்தவர்களில் எந்த ஆட்சி மக்களுக்கு பயன்பட்டதோ அந்த ஆட்சிக்கு வாக்களிக்க வேண்டும்.

ஓபிஎஸ் இரட்டை இலை சின்னம் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டது. அதிமுகவில் ஏற்பட்டுள்ள பங்காளி சண்டை, அவர் அதிமுகவை சேர்ந்தவர்தான். வருகின்ற 2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக ஒரே அணியில் போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.