சிறுபான்மை வாக்குகளை பிரிக்கவே அதிமுகவை பாஜக தனியாக நிற்க வைத்துள்ளது: திருமாவளவன்

பாஜகவால் பாமகவை மிரட்டியது போல் மிரட்டி அதிமுகவை கூட்டணியில் சேர்த்து இருக்க முடியும் என்றும் திமுகவிற்கு விழும் சிறுபான்மை வாக்குகளை பிரிக்கவே அதிமுகவை பாஜக தனியாக நிற்க வைத்துள்ளது என்றும் திருமாவளவன் கூறினார்.

முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் சென்னை அம்பத்தூரில், நேற்று இரவு நடந்தது. இதில் திமுக பொருளாளர் டி ஆர் பாலு, விசிக தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன் பேசியதாவது:-

முன்பு ஒருமுறை ராமதாஸ், பாஜகவிற்கு மார்க் போடுவது குறித்து பத்திரிக்கையாளர்கள் கேட்ட போது, பூஜியத்திற்கு கீழ் ஏதாவது இருந்தால் சொல்லுங்கள் என்று கூறியிருந்தார். அந்த வகையில் ராமதாஸ் அவர்களுமே பாஜகவை பூஜியத்திற்கு கீழ் தான் வைத்திருக்கிறார். திமுகவும் ஏற்கனவே பாஜகவை பூஜியத்திற்கு கீழ் தான் வைத்திருக்கிறது. கடந்த தேர்தலில் ஒரே அணியாக இருந்த பாஜக, அதிமுக, பாமக மூன்றாக சிதறிய நிலையில், இன்று பாஜக பாமக என ஒரு அணியாகவும், அதிமுக ஒரு அணியாகவும் சிதறி உள்ளனர். ஒரு வருடமாக அண்ணாமலை கதவுகளை திறந்து வைத்தார்.. ஜன்னல் கதவுகளை திறந்து வைத்தார்.. யாரும் வந்தபாடில்லை.. இவரே போய்.. பாமக கதவுகளை திறந்து வைத்து உள்ளே போனார்.. இவர் திறந்து வைத்த கதவுகளுக்குள் யாருமே போகவில்லை. இவராக போய் பாமகவை பார்த்து பேசி தூக்கி கொண்டு வந்துவிட்டார். ஹைஜாக் பண்ணிவந்துவிட்டார். அதிமுகவும் கதவுகளை திறந்து வைத்தது.. ஆனால் யாரும் கிடைக்கவில்லை.. ஆள் பிடிக்க பார்த்தார்கள்.. ஆள் பிடிக்க முடியவில்லை..

ஆனால் திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தமிழக வாழ்வுரிமை கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனித நேய மக்கள் கட்சி, புதிதாக மக்கள் நீதி மய்யம் போன்றவை இருக்கின்றன.. இதெல்லாம் எப்படி நடந்தது. திமுக தலைவர் ஸ்டாலினின் ஆளுமையால் நிகழ்ந்தது.. இல்லை என்றால் அண்ணாமலை மாதிரி உளறி கொட்டியிருந்தால் கூட்டணி சிதறி போயிருக்கும்.. அதிமுக வெளியே போவதற்கு அண்ணாமலையின் உளறல் தான் காரணம்.. அண்ணாமலையிடம் தலைமை பண்பு இல்லை.. அதனால் உளறினார்.. திமுக கூட்டணி இவ்வளவு கட்டுக்கோப்பாக இருப்பதற்கு காரணம் கொள்கை புரிதல் உள்ள ஆற்றல் வாய்ந்த ஆளுமை என்பதால் கட்டுக்கோப்பாக இருக்கிறது. இதுதான் அந்த வேறுபாடு..

திமுக கூட்டணிக்குள் வருவதற்கு பாமக முயற்சித்தது.. யாரும் மறுக்க முடியாது.. ஆனால் தலைவர், தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கு எதையும் உற்றுநோக்கும், மதிப்பீடு செய்யும் ஆளுமை இருந்ததால், எந்த ஊசலாட்டமும் இல்லை.. கூட்டணியை மாற்றியமைக்க வேண்டிய எண்ணம் அவருக்கு துளியும் இல்லை. விசிக உள்பட அனைத்து கட்சிகளும் இந்தியா கூட்டணியில் இருக்க ஸ்டாலினின் ஆளுமை தான் காரணம்.

தமிழ்நாட்டில் ஏழு முறை பிரதமர் மோடியை அழைத்து பேச வைத்துவிட்டால் ஏமாறுவதற்கு தமிழர்கள் வட இந்தியர்களா என்ன? ஜெய்ஸ்ரீராம் என்று சொன்னதும் மோடி மோடி என்று மயங்கி கூச்சல் போடுவார்கள் என்று நினைத்தீர்களா? இது பெரியார் பக்குவப்படுத்திய மண், அண்ணா பக்குவப்படுத்திய மண், கலைஞர் கட்டிக்காத்த மண்.. யாரை எப்படி எடை போட வேண்டும் என்ற பக்குவம் தமிழக வாக்காளர்களுக்கு உண்டு.. மோடி எத்தனை முறை தமிழ்நாட்டிற்கு வந்தாலும் இங்கு வாக்குகளை பெற முடியாது.. தமிழ்நாட்டில் பாஜகவின் வாக்குசதவீதத்தை அதிகரிக்க விரும்புகிறார்கள்.. எப்படி என்றால் புதிய நீதி கட்சி ஏசி சண்முகத்தை தாமரையில் நிற்பாட்டுவார்கள். அவர் வாங்கும் வாக்கு எல்லாம் தாமரை கணக்கில் சேரும்.. ஐஜேகே பாரிவேந்தரை தாமரையில் நிற்பாட்டுவார்கள்.. அதுவும் தாமரை கணக்கில் தான் வரும்.. சரத்குமாரை பொறுத்தவரை பாஜகவில் போய் சேர்ந்துவிட்டார், அவருக்கு என்று சாதி ஓட்டு இல்லை.. சில கட்சிகளுக்கு சமூக வாக்கு வங்கி உள்ளது. அதை வாங்கி பாஜக கணக்கில் ஏற்றி, என் கணக்கில் இவ்வளவு சதவீதம் ஓட்டு என்று காட்ட பார்க்கிறார்கள்.. அவர்களின் நோக்கம் என்னவென்றால், மக்கள் திமுகவிற்கு எதிராக இவ்வவளவு பேர் வாக்களித்துள்ளார்கள் என்பதை காட்ட பார்க்கிறார்கள்..

10 தொகுதியிலும் தோற்க போகிறோம் என்று பாமகவிற்கு தெரியும்.. 10 தொகுதியில் பாமக மாம்பழம் சின்னத்தில் நிற்கும்,. அவர்கள் ஆதரவாளர்கள் மற்ற தொகுதியில் தாமரைக்கு வாக்களிப்பார்கள். இதுவும் சமூக வாக்கு வங்கி தான். அந்த வாக்கையும் தனக்கு விழுந்த வாக்காக பாஜக காட்ட போகிறது.. இவர்களுக்கு என்று ஒரு ஓட்டு கூட விழாது.. மோடிக்காக விழாது,.. தமிழ்நாட்டில் அடுத்த பெரிய கட்சி என்று காட்டவே தேர்தலில் நிற்கிறார்கள். 10 சதவீதம் வாக்கு இப்போது வாங்கிவிட்டால் திமுக vs பாஜக என்று இருதுருவ அரசியலாக மாற்ற வேண்டும் என்பது தான் அவர்களின் நோக்கம்..

அதிமுக கூட்டணியில் இல்லாததன் காரணம் அண்ணாமலை அல்ல.. பாஜக தலைமை அவர்களை தனியாக நிற்க வைத்து மைனாரிட்டி ஓட்டுகளை பிரிக்கவேண்டும் என்பது தான்.. அண்ணாமலை காரணம் என்றால் டெல்லி தலைமை நேரில் அழைத்து பேசி அவர்களை சேர்த்து வைத்திருக்கும்.. அல்லது அவரை மாற்றியிருக்கும். இல்லை என்றால் பாமகவை மிரட்டியதுபோல் மிரட்டி அதிமுகவை கூட்டணியில் சேர்த்து இருக்க முடியும்.. வெற்றி பெற வேண்டும் என்று விரும்பி இருந்தால் அதிமுகவையும் அவர்கள் கூட்டணியில் சேர்த்திருக்க முடியும்.. அவர்கள் இடத்திலே ஏவுவதற்கு பல நிறுவனங்கள் இருக்கின்றன.. ஈடி இருக்கிறது.. ஐடி இருக்கிறது.. சிபிஐ இருக்கிறது.. ஏன் அவர்கள் செய்யவில்லை.. நீங்கள் இந்த 40 தொகுதிகளிலும் தோற்று போக வேண்டும்.. அதிமுகவை விட கூடுதல் வாக்கு வாங்க வேண்டும் என்பது பாஜக தலைமையின் விருப்பம்.. அல்லது சமமாக வாங்கி காட்ட வேண்டியது அவர்களின் விருப்பம்.. கணக்கே இல்லாதவன் கணக்கு தொடங்கினாலே முன்னேற்றம் தானே. இவ்வாறு திருமாவளவன் பேசினார்.