“எண்ணிக்கை முக்கியமல்ல, கூட்டணி பலமடைய வேண்டும் என்பதற்காக இரண்டு தொகுதிகளுக்கு ஒப்புக்கொண்டோம்.” என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ள டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் அண்ணாமலை மற்றும் டிடிவி தினகரன் கையெழுத்திட்டனர். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் கூறியதாவது:-
அமமுக ஒரு மாநில கட்சி. எங்களின் நிர்வாகிகள் பலரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவே விரும்புகிறார்கள். மக்களவை தேர்தலை பொறுத்தவரை 9 தொகுதிகளில் போட்டியிட எங்கள் நிர்வாகிகள் விருப்பட்டார்கள். அந்த தொகுதிகளின் பட்டியலை பாஜகவிடம் கொடுத்தோம்.
பாஜக எனக்கு முதலில் நிறைய தொகுதிகளை ஒதுக்கியது. ஆனால், ‘கூட்டணி பலப்பட வேண்டும், நிறைய கட்சிகள் வர வேண்டும். எனக்கு கொடுத்த தொகுதிகளில் எதாவது விட்டுக்கொடுக்க வேண்டும் என்றால் விட்டுக்கொடுக்க தயாராக உள்ளேன்’ என்று கூறினேன். எண்ணிக்கை முக்கியமல்ல, கூட்டணி பலமடைய வேண்டும் என்பதற்காக இரண்டு தொகுதிகளுக்கு ஒப்புக்கொண்டோம்.
9 தொகுதிகள் கொடுத்தாலும் போட்டியிடுகிறோம் என்றோம். விருப்பப்பட்ட தொகுதிகளை தான் கேட்டோம். மற்ற கட்சிகள் இணைவதை பொறுத்து தொகுதிகளை மாற்றிக்கொள்ள தயார் என்பதை பாஜகவுடன் சேர்ந்த முதல் நாளே தெரிவித்தேன். அதன்படி, முதலில் எனக்கு வேறு எண்ணிக்கை சொன்னார்கள். நானும் அதற்கு ஒப்புக்கொண்டேன். அதன்பிறகு சில கட்சிகள் வரும்போது தொகுதிகளை கேட்டார்கள். கொடுத்துவிட்டேன். இன்னும் சொல்லப்போனால், ஒரு தொகுதி கூட போதும் என்று தான் கூறினோம். ஆனால், குறைந்தபட்சம் இரண்டு தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என பாஜக கூறியதால் ஒப்புக்கொண்டோம்.
திமுக, அதிமுகவுக்கு இணையான கட்டமைப்பு எங்கள் கட்சிக்கு உண்டு. எங்களின் செல்வாக்கு மிகுந்த பகுதியாக டெல்டா மற்றும் தென் தமிழகத்தில் உள்ளது. டெல்டா மற்றும் தென் தமிழகத்தின் 15 மக்களவை தொகுதிகளில் எங்களோடு சேர்பவர்களுக்கே வெற்றி வாய்ப்புள்ளது. அதுதான் உண்மை. மற்ற தொகுதிகளிலும் கணிசமான வாக்குவங்கி உள்ளது. 2019 தேர்தல் வாக்குகளே அதற்கு உதாரணம். இவ்வாறு அவர் கூறினார்.