ஆளுநர் பதவியை ராஜிநாமா செய்த தமிழிசை செளந்தரராஜன் மீண்டும் பாஜகவில் இணைந்தார். தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தெலங்கானா மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் ஆளுநராக இருந்த தமிழிசை சவுந்தர்ராஜன் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அவர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவார் என பேசப்பட்டது. ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த பிறகு முதல்முறையாக இன்று கமலாலயம் வந்த தமிழிசைக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அண்ணாமலை முன்னிலையில் தமிழிசை சவுந்தரராஜன் மீண்டும் தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார். சென்னை கமலாலயத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, தமிழிசைக்கு உறுப்பினர் அட்டை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழிசை கூறியதாவது:-
கமலாலயத்தில் மீண்டும் நுழைந்ததற்காக இறைவனுக்கு நன்றி தெரிவிக்கிறேன். தலைவராக இருந்து ஆளுநராக மாறி தொண்டராக இறங்கி வந்துள்ளேன். தம்பியிடம் இருந்து அக்கா என்ற முறையில் மீண்டும் பா.ஜ.க உறுப்பினர் அட்டையைப் பெற்றிருக்கிறேன். கஷ்டமான முடிவை எடுத்திருந்தாலும் அதை இஷ்டப்பட்டு எடுத்துள்ளேன். ஆளுநர் பதவியை விட பாஜகவின் உறுப்பினர் என்ற பதவியே எனக்கு மிகப்பெரியது.
கஷ்டமான முடிவை எடுத்திருந்தாலும் அதை இஷ்டப்பட்டு எடுத்துள்ளேன். பாத யாத்திரையாக தமிழகம் முழுவதும் சுற்றி வருவது எளிதானது அல்ல. தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற விருப்பத்தை தலைமையிடம் கூறியுள்ளேன். தேர்தலில் போட்டியிடுவதாக இருந்தால் தமிழ்நாட்டில் இருந்துதான் நிச்சயம் போட்டி. வாரிசுகள் இல்லாத தலைவர்கள் வரிசையை வேறு எந்த கட்சியிலும் பார்க்க முடியாது. தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும். இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த தமிழிசை செளந்தரராஜன் கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடியில் போட்டியிட்டு திமுக கனிமொழியிடம் தோல்வி அடைந்தார். இதனைத் தொடர்ந்து, கடந்த 2019 செப்டம்பரில் தெலங்கானா ஆளுநராக தமிழிசை பொறுப்பேற்றார். பின்னர், புதுவை துணைநிலை ஆளுநராக 2021-ல் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.