மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத் துறை கைது செய்தது. இதனால், டெல்லியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.
டெல்லியில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சுமார் மூன்று மணி நேரம் விசாரணையில் ஈடுபட்டனர். அதன்பின், அதிரடியாக கைது செய்யப்பட்ட அவர் நாளை வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார். இதனிடையே, ஆம் ஆத்மி நிர்வாகிகளும் தொண்டர்களும் ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருவதால், போலீஸாரும் பாதுகாப்புப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக, டெல்லி அரசின் மதுபானக் கொள்கை ஊழல் தொடர்பான பண மோசடி வழக்கில் தொடர்பாக அம்மாநிலத்தின் 2 அமைச்சர்களை அமலாக்கத் துறை கைது செய்தது. இருவரும் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு இதுவரை ஜாமீன் வழங்கப்படவில்லை. இது தொடர்பாக மாநில முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்த வேண்டும் என அமலாக்கத் துறை அவருக்கு சம்மன் அனுப்பியது. அமலாக்கத் துறை தனக்கு சம்மன் அனுப்பியது சட்ட விரோதம். தான் எந்த தவறும் செய்யவில்லை என்று கூறி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜராக மறுத்து வந்தார்.
கொள்கை உருவாக்கம் இறுதி செய்யப்படுவதற்கு முன் நடைபெற்ற கூட்டங்கள் மற்றும் லஞ்ச குற்றச்சாட்டுகள் குறித்து கெஜ்ரிவாலின் வாக்குமூலத்தை அமலாக்கத் துறை பதிவு செய்ய விரும்புகிறது. ஆனால், இந்த சம்மன்கள் சட்டவிரோதம் எனவும், அரசியல் உள்நோக்கம் கொண்டவை எனவும் கேஜ்ரிவால் கூறிவருகிறார். அவர் விசாரணையை தவிர்ப்பது தொடர்பாக 2 புகார் மனுக்களை டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை சமீபத்தில் தாக்கல் செய்தது. இவ்வழக்கில் கெஜ்ரிவால் சமீபத்தில் நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது அமலாக்கத் துறை சம்மன்களை தவிர்ப்பது தொடர்பான வழக்கில் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கி கூடுதல் முதன்மை பெருநகர மாஜிஸ்திரேட் திவ்யா மல்ஹோத்ரா உத்தரவிட்டார். மேலும், புகார்கள் தொடர்பான ஆவணங்களை கேஜ்ரிவாலிடம் வழங்குமாறு அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்டார்.
அதேவேளையில், இந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரி டெல்லி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்தார். ஆனால் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்தப் பின்னணியில்தான், மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை இன்று வியாழக்கிழமை அமலாக்கத் துறை கைது செய்தது.
முன்னதாக டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா கடந்த 15-ம் தேதி அமலாக்கத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். வரும் 23-ம் தேதிவரை அவரை காவலில் எடுத்த அமலாக்கத் துறையினர் அவரிடம் விசாரித்து வருகின்றனர். இது குறித்து டெல்லியில் உள்ள அமலாக்கத் துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில், மதுபானக் கொள்கை விவகாரத்தில், டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால், மணீஷ்சி சோடியா ஆகியோருடன் இணைந்து கவிதா முறைகேடு செய்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மொத்த வியாபாரிகளிடம் இருந்து வந்த பணத்தை ஆம் ஆத்மி கட்சியினர் பங்கு போட்டுக் கொண்டனர். ஆம் ஆத்மி கட்சிக்கு கவிதா ரூ.100 கோடி வழங்கி உள்ளார் என்று அதில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்க்து.