எங்களை பாஜக அடிமையாக இருந்ததாக சொன்னார்கள். ஆனால், இவர்கள்தான் பாஜகவுக்கு அடிமையாக இருக்கிறார்கள் என்று அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு கூறினார்.
மதுரை மாநகர அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு (ஐடி விங்) நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் மற்றும் அதிமுக வேட்பாளர் டாக்டர் பி.சரவணன் அறிமுகக் கூட்டம் இன்று மாநகர கட்சி அலுவலகத்தில் நடந்தது. முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு தலைமை வகித்து, மதுரை அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணனை அறிமுகம் செய்து வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அதிமுக வேட்பாளராக போட்டியிடும் மக்களின் மருத்துவர் டாக்டர் பி.சரவணன் போட்டியிடுவார். இவரை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. ஏற்கெனவே பல தேர்தல்களில் சரவணன் போட்டியிட்டுள்ளார். எளிமையானவர். அரசியலுடன் பல்வேறு சமூகப் பணிகளையும் செய்து வருகிறார். மற்ற வேட்பாளர்களை முகத்தை உம் என்று வைத்துக்கொண்டு இருப்பார்கள். ஆனால், இவர் அப்படி இல்லை. எப்போதும் சிரித்த முகத்துடன் காணப்படுகிறார். இதே சிரிப்புடன் அவரை மக்களவைக்கு அனுப்பி வைக்க அதிமுகவினர் இன்று முதல் இவருக்கு ஆதரவாக தீயாக வேலை பார்க்க தயாராகிவிட்டார்கள்.
திமுக கூட்டணியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன், மதுரை மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை. கடந்த ஐந்து ஆண்டாக மக்கள் அவரை சமூக வலைதளங்களில் மட்டுமே பார்க்க முடிந்தது. களத்தில் பார்க்க முடியவில்லை. கடந்த ஆறு மாதமாக தேர்தலில் கட்சியில் சீட் பெறுவதற்காகவும், மீண்டும் மக்களை ஏமாற்றி வெற்றி பெறவும் தொகுதியில் தலைகாட்ட ஆரம்பித்தார். அதனால், அவரை எதிர்கொள்வதில் எங்களுக்கு எந்த கஷ்டமும் இல்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் அவரை விட்டால் தேர்தலில் போட்டியிட ஆள் இல்லையா என அவர்கள் கட்சியிலேயே எதிர்ப்பும், மனக்கசப்பும் கிளம்பியுள்ளது. அவரை விட சீனியர் நிர்வாகிகள், மக்களுக்கு முழுநேரமும் உழைத்தவர்கள் ஏராளமானோர் உள்ளனர்.
சமீபத்தில் மதுரைக்கு வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், பாஜகவை விட அதிமுக ஆபத்தானது என்று கூறியுள்ளார். அவர் உண்மையிலே சுயநினைவுடன் சொன்னாரா? அல்லது சுயநினைவில்லாமல் சொன்னாரா என்பது தெரியவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை மதுரையில் எத்தனை முறை ஜெயிக்க வைத்திருப்போம். அதிமுக தொண்டர்கள், அவர்கள் கட்சி வேட்பாளர்களுக்காக தமிழகம் முழுவதும் எவ்வளவு பணியாற்றி இருப்பார்கள். அதை கொஞ்சம் கூட மனதில் வைத்துக் கொள்ளாமல் இப்படி பேசியிருப்பது அதிமுகவினரை அவரது வேட்பாளருக்கு எதிராக தீவிரமாக களம் இறங்க வைத்துள்ளது.
பொதுவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் நிதானமாக பேசுவார்கள். ஆனால், பாலகிருஷ்ணன் நிதானமில்லாமல் பேசியிருக்கிறார். தோல்வி பயத்தில் அவர் இப்படி பேசியிருக்கலாம். அவரை அதிமுக வன்மையாகக் கண்டிக்கிறது. மக்கள்தான் எஜமானர்கள். அவர்கள்தான் யாரை வெற்றி பெற வைக்க வேண்டும் என முடிவு செய்வார்கள்.
அதிமுகவில் சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றிய செயலாளர்களை வேட்பாளராக அறிவிக்கிறோம். ஆனால், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை பாருங்கள், ஒன்று வாரிசு வேட்பாளராக இருப்பார்கள் அல்லது தலைவர்களுக்கு மட்டுமே வேட்பாளராக இருப்பார்கள். எம்ஜிஆர், ஜெயலலிதா பாணியில் கே.பழனிசாமி தற்போது மக்களவைத் தேர்தலில் வேட்டபாளர்களை அறிவித்துள்ளார்.
வடிவேல் பாணியில் இன்னுமா மக்கள் நம்மை நம்புகிறார்கள் என்று சொல்கிற அளவிலே திமுகவின் தேர்தல் அறிக்கை உள்ளது. ஏற்கெனவே சட்டசபை தேர்தலில் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. பெட்ரோல், டீசலை குறைப்போம் என்றார்கள். குறைத்தார்களா? நீட் தேர்வை ரத்து செய்வோம் என்றார்கள்; ரத்து செய்தார்களா? கேஸ் சிலிண்டர் விலையை குறைப்போம் என்றார்கள். குறைத்தார்களா? அதற்குள் மற்றொரு வாக்குறுதி பட்டியலை அறிவித்துள்ளார். மக்கள் அதை நம்பமாட்டார்கள்.
திமுக மக்களவை உறுப்பினர்கள் தமிழக மக்களுக்காக, அவர்கள் உரிமைக்காக கடந்த ஐந்து ஆண்டு என்ன சாதித்தார்கள். அதிமுகவுக்கு மக்கள் பிரச்சினைகளுக்காக மக்களவையை முடக்கிய வரலாறு உண்டு. எங்களை பாஜக அடிமையாக இருந்ததாக சொன்னார்கள். ஆனால், இவர்கள்தான் பாஜகவுக்கு அடிமையாக இருக்கிறார்கள். மோடியை வரவேற்க சென்ற திமுகவினர், கருப்புக் குடைக்கு பதிலாக வெள்ளைக் குடையை நாட்டுக்கு அறிமுகப்படுத்தினார்கள். எங்கே கருப்புக் குடையை கொண்டு சென்றால் அவருக்கு எதிராக அமைந்துவிடுமோ என்று பயந்துவிட்டார்கள். இவ்வாறு செல்லூர் ராஜு பேசினார்.