மேகதாதுவில் அணை கட்டும் முயற்சி தடுக்கப்படும் என லோக்சபா தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை நேற்று திமுக வெளியிட்டது. இந்நிலையில் தான் மேகதாதுவில் அணை கட்டி முடிக்க வேண்டும் என்பதற்காகவே நீர்ப்பாசனத்துறையை வைத்துள்ளேன் என்று கர்நாடகா காங்கிரஸ் தலைவரும், துணை முதல்வருமான டிகே சிவக்குமார் பேசியுள்ளார்.
தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19 ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் 39 தொகுதிகள் உள்ள நிலையில் திமுக 21 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. மீதமுள்ள 18 தொகுதிகளில் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர். திமுக கூட்டணியில் காங்கிரஸ் தவிர பிற அனைத்து கட்சிகளின் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு விட்டன. இந்நிலையில் தான் நேற்று திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. கனிமொழி எம்பி தலைமையில் தயாரிக்கப்பட்ட திமுக தேர்தல் அறிக்கையை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். இந்த தேர்தல் அறிக்கையில் பல்வேறு முக்கிய வாக்குறுதிகள் இடம்பெற்றிருந்தது. திமுகவின் இந்த தேர்தல் அறிக்கையில் விவசாயம் என்ற தலைப்பின் கீழ் மேகதாது அணை கட்டும் முயற்சிகள் தடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் இன்று பெங்களூர் சதாசிவநகரில் கர்நாடகா காங்கிரஸ் தலைவரும், கர்நாடகா துணை முதல்வரான டிகே சிவக்குமார் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் மேகதாது அணை விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதாவது பத்திரிகையாளர் ஒருவர், ‛‛திமுக தனது தேர்தல் அறிக்கையில் மேகதாதுவில் அணை கட்ட விடமாட்டோம் என தெரிவித்துள்ளது?” என கேள்வி எழுப்பினார். இதற்கு டிகே சிவக்குமார், ‛‛அவர் மாநிலத்தை அவர் பார்த்து கொள்ளட்டும். நான் கர்நாடகாவில் நீர்ப்பாசனத்துறையை (நீர்ப்பாசனத்துறையை டிகே சிவக்குமார் தான் வைத்துள்ளார்)பெற்றிருப்பதே மேகதாது அணையை கட்டுவதற்காக தான். அவர் போராட்டத்தை அவர் செய்கிறார். ஆனால் சட்டம், காவிரி ஆணையம் முன்பு வழக்கு வர உள்ளது. அதில் நியாயம் கிடைக்கும். ஏனென்றால் பெங்களூரில் நிலவும் தண்ணீர் பிரச்சனை பற்றிய அவர்கள் அறிந்து வைத்துள்ளனர். அனைத்து நீதிமன்றங்களிலும் நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.
பாஜகவை வீழ்த்த ‛இந்தியா’ கூட்டணியில் காங்கிரஸ்-திமுக கட்சிகள் உள்ளன. தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கிடையே தான் மேகதாதுவில் அணை கட்டும் முயற்சி தடுக்கப்படும் என திமுக லோக்சபா தேர்தலுக்கான தேர்தல் வாக்குறுதியை அளித்துள்ள நிலையில் கர்நாடகா காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார், அணை கட்டுவதற்காக தான் நீர்ப்பாசனத்துறையை தான் வைத்துள்ளதாக கூறி பரபரப்பை கிளப்பி உள்ளார்.