ஒரு முதல்வர் கைது செய்யப்படுவது இது முதல்முறை அல்ல என தெரிவித்துள்ள தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஒமர் அப்துல்லா, இது கடைசி முறையாகவும் இருக்கப் போவதில்லை என கூறியுள்ளார்.
கெஜ்ரிவாலின் கைது குறித்து ஸ்ரீநகரில் செய்தியாளர்களிடம் பேசிய ஒமர் அப்துல்லா கூறியதாவது:-
ஒரு முதல்வர் கைது செய்யப்படுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன், சில வாரங்களுக்கு முன், ஜார்கண்ட் முதல்வரும் எங்கள் நண்பருமான ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட உள்ளதை அறிந்த அவர், ஆளுநர் மாளிகைக்குச் சென்று பதவியை ராஜினாமா செய்தார். இல்லாவிட்டால் என்ன நடக்கும் என்பது அவருக்குத் தெரியும். முதல்வராகவே அவர் கைது செய்யப்பட்டிருந்தால், அரசியல் சாசனத்தைப் பயன்படுத்தி பாஜக, அம்மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தி இருக்கும்.
டெல்லி விஷயத்தில் தற்போது அதுதான் எனது கவலை. சிறையில் இருந்தாலும் கெஜ்ரிவால் முதல்வராக தொடருவார் என்பது ஆம் ஆத்மி கட்சியின் நிலைப்பாடாக தொடருமானால், அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு பாஜக டெல்லியில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தும். அரவிந்த் கெஜ்ரிவால் முதல் நபர் அல்ல; அவர் கடைசி நபரும் அல்ல. இது தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.