ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் ஓபிஎஸ் சுயேச்சையாக போட்டியிடுவது மகிழ்ச்சியளிக்கிறது என காஞ்சிபுரத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
காஞ்சிபுரத்தில் உள்ள காஞ்சி ஸ்ரீ சங்கர மடத்திற்கு நேற்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது மனைவியுடன் சென்றார். ஸ்ரீ சந்திரசேகேந்திர சரஸ்வதி சுவாமிகள் மற்றும் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆகியோரின் பிருந்தாவனத்தில் சாமி தரிசனம் மேற்கொண்டார். அதனையடுத்து காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதியான ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகளை மரியாதை நிமித்தமாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது மனைவியுடன் சந்தித்து அவரிடம் ஆசி பெற்றார். குறிப்பாக ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகளின் காலில் தனது மனைவியுடன் சாஷ்டானமாக விழுந்து வணங்கி அவரிடம் ஆசி பெற்றார். அப்போது காஞ்சி சங்கராச்சாரியார் வழங்கிய குங்கும பிரசாதத்தை பயபக்தியுடன் வணங்கி வாங்கிய அவருக்கு அவரது மனைவி அக் குங்குமத்தை அவரது நெற்றியில் இட்டார்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் கூறியதாவது:-
கடந்த 1999ஆம் ஆண்டு முதல் முதலாக தேர்தலில் வேட்பாளராக போட்டியிடும் போது ஜெயலலிதா காஞ்சி சங்கராசாரியாரை சந்தித்து ஆசி பெறுமாறு கேட்டுக்கொண்டார், அதன்படி அன்று சந்தித்து ஆசி பெற்றேன். அன்று முதல் இன்று வரை தொடர்ந்து அவ்வப்போது சங்கராச்சாரியாரை சந்தித்து ஆசி பெறுவதும் வழக்கம். மரியாதை நிமித்தமாக தற்போது மீண்டும் காஞ்சி சங்கராச்சாரியாரை சந்தித்து ஆசி பெற்றேன்.
பாஜக மதவாதக்கட்சி என்பதை நான் ஏற்றுக்கொள்வதில்லை. பாஜகவில் அனைத்து மதத்தினரும் உள்ளனர். 3வது முறையாக மோடி பிரதமராவது உறுதி. ஊழல் இல்லாமல் 10 ஆண்டுகளாக மோடியின் சாதனை ஆட்சி நடந்து வருகிறது. கடந்த தேர்தலை விட இத்தேர்தலில் பாஜக எம்பிக்கள் கூடுதலாக சென்று மக்களவையை அலங்கரிப்பார்கள் என்பதில் சந்தேகமே இல்லை.
ஓபிஎஸ் ராமநாதபுரத்தில் சுயேச்சையாக போட்டியிடுவது மகிழ்ச்சியளிக்கிறது. நீதிமன்றத்தில் வழக்குகள் இருப்பதால் அவர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட முடியாத நிலை உள்ளது. அவரது விருப்பபடியே ராமநாதபுரத்தில் அவர் போட்டியிடுகிறார். அதிகமான வாக்குகள் பெற்று ஓபிஎஸ் வெற்றி பெறுவார். என்னைப் பொறுத்தவரை பாஜக நிர்ப்பந்திக்கவில்லை. குக்கர் சின்னத்தில் தான் நாங்கள் போட்டியிடுகிறோம். எங்களுக்கு தொகுதிகள் ஒதுக்கிய பிறகு எங்கள் கட்சி வேட்பாளர்களை அறிமுகம் செய்வேன்.
அமலாக்கத்துறை என்பது தனிப்பட்ட அமைப்பு. அதற்கு அளவில்லாத அதிகாரம் உள்ளது. இதை நீதிமன்றமும் சொல்லி இருக்கிறது. மு.க.ஸ்டாலின் சிறுபான்மையினருக்கு ஆதரவாக செயல்படுகிறார். அதே நேரத்தில் இந்துக்களுக்கு தீபாவளி வாழ்த்துக் கூட சொல்ல முடியாத இந்துக்களின் விரோதியாகவே செயல்பட்டும் வருகிறார். எடப்பாடி பழனிச்சாமி திருந்தினால் மட்டுமே அதிமுகவை பலப்படுத்த முடியும். இவ்வாறு அவர் கூறினார்.