மதுபான கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத் துறை நேற்று கைது செய்தது. இந்நிலையில், இதற்கு தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி.
ராகுல் காந்தி இதுகுறித்து கூறுகையில், “பயந்துபோன சர்வாதிகாரி மாண்ட ஜனநாயகத்தை உருவாக்க விரும்புகிறார். அனைத்து விசாரணை அமைப்புகளையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது, கட்சிகளை உடைப்பது, நிறுவனங்களிடமிருந்து நிதி ஆதாயம் பெறுவது மற்றும் முக்கிய எதிர்க்கட்சியின் வங்கிக் கணக்கை முடக்குவது போன்றவை போதாதென்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர்களை கைது செய்வதையும் வழக்கத்துக்குள் கொண்டு வருகிறார்கள். இதற்கு இண்டியா தக்க பதிலடி கொடுக்கும்” என அவர் தெரிவித்துள்ளார்.
“தேர்தலுக்கு முன்பாக எதிர்க்கட்சிகளை பலவீனப்படுத்தும் நோக்கில் தினந்தோறும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது அராஜக பாஜக. நீங்கள் வெற்றி பெறுவீர்கள் என உறுதியாக நம்பினால் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்கை முடக்கி உள்ளது ஏன்? தேர்தலுக்கு முன்பாக எதிர்க்கட்சித் தலைவர்களை குறிவைப்பது ஏன்? இதன் மூலம் புலப்படும் உண்மை என்னவென்றால் எதிர்வரும் தேர்தல் முடிவுகளை கருதி பாஜக அச்சம் கொண்டுள்ளது. அதனால் தான் எதிர்க்கட்சிக்கு இம்சை கொடுக்கிறது. இது மாற்றத்துக்கான நேரம். பொறுப்பில் இருந்து விடை கொடுக்கும் நேரம்” என காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
இந்த சூழலில் கேஜ்ரிவால் கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று (வெள்ளிக்கிழமை) டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்துக்கு ஆம் ஆத்மி கட்சி அழைப்பு விடுத்துள்ளது.