2ஜி வழக்கில் விடுதலைக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவில் இன்று தீர்ப்பு!

2ஜி வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா. திமுக எம்பி கனிமொழி உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து சிபிஐ தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை ஏற்கலாமா வேண்டாமா என்பது குறித்து டெல்லி உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அமைந்த போது மத்திய தொலை தொடர்புத் துறை அமைச்சராக இருந்தவர் ஆ.ராசா. அப்போது 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. அதாவது பகிரங்க ஏலம் விடாமல் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற நடைமுறை பின்பற்றப்பட்டது. இதன் மூலம் 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பீடு ஏற்படுத்தியதாக ஆ. ராாச மீது மத்திய கணக்கு தணிக்கை குழு குற்றம்சாட்டியிருந்தது. இதன் அடிப்படையில்தான் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்னர். பின்னர் அனைவருமே ஜாமீனில் விடுதலையாகினர். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் குற்றவாளிகள் இல்லை என 2018 ஆம் ஆண்டு தீர்ப்பளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.

டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.ஷைனியின் இந்த தீர்ப்புக்கு எதிராக சிபிஐ, அமலாக்கத் துறை உள்ளிட்டவை டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன. இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நிறைவடைந்துள்ளன. இந்த நிலையில் சிபிஐ தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை ஏற்பதா வேண்டாமா என்பது குறித்து டெல்லி உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது. மக்களவைத் தேர்தலில் கனிமொழி, ஆ.ராசா ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று வெளியாகும் இந்த வழக்கின் தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.