தேமுதிக வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் தொகுதியில் விஜயகாந்த் மகன், “விஜய பிரபாகரன்” போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக – தேமுதிக இடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் நேற்று முன் தினம் கையெழுத்தானது. அதன்படி, அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. திருவள்ளூர் (தனி), மத்திய சென்னை, கடலூர், விருதுநகர், தஞ்சாவூர் ஆகிய 5 சீட்கள் தேமுதிகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் கையெழுத்திட்டனர். இந்நிலையில், தேமுதிக வேட்பாளர்களுக்கான நேர்காணலை நேற்று நடத்தினார் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த். நேர்காணலுக்குப் பிறகு, வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என பிரேமலதா தெரிவித்திருந்தார். மேலும், 24ஆம் தேதி திருச்சியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் வேட்பாளர்கள் அறிமுகம் செய்து வைக்கப்படுவார்கள் எனத் தெரிவித்தார் பிரேமலதா.
இந்நிலையில், தேமுதிக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார் பிரேமலதா விஜயகாந்த். அதிமுக கூட்டணியில் தேமுதிக போட்டியிடும் 5 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி விருதுநகர் தொகுதியில் விஜய பிரபாகரன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் தொகுதியில் விஜய பிரபாகரன், மத்திய சென்னை தொகுதியில் பார்த்தசாரதி, திருவள்ளூர் தொகுதியில் நல்லதம்பி, தஞ்சாவூர் தொகுதியில் சிவநேசன், கடலூர் தொகுதியில் சிவக்கொழுந்து போட்டியிடுகின்றனர்.