“வேடந்தாங்கல் பறவை போல அன்புமணி ராமதாஸ் அடிக்கடி கூட்டணியை மாற்றிக் கொண்டிருக்கிறார்” என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-
விடியா திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, கடந்த 3 ஆண்டுகளில் எங்கு பார்த்தாலும் ஊழல். கடுமையான ஊழல். எங்கு பார்த்தாலும் ஊழல்.. ஊழல் இல்லாத இடமே கிடையாது. போதைப்பொருள் விற்பனை. திமுக நிர்வாகிகளே வெளிநாட்டிற்கு போதைப்பொருள் கடத்தியதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்தன. இப்படிப்பட்ட ஒரு நிலைமையில், தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டும் என்றால், இந்த தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றால் தான் முடியும். நான் ஏற்கனவே சொன்னதை போல், அதிமுக வெற்றி பெற்றால் தான் தமிழ்நாட்டை காப்பாற்ற முடியும்.
ராமதாஸ் வேடந்தாங்கல் பறவை போல அடிக்கடி கூட்டணியை மாற்றி வருகிறார். வேடந்தாங்கல் பறவை தான் ஏரியில் தண்ணீர் இருக்கும் போது வரும். பின்னர் குளத்தில் தண்ணீர் வற்றியதும் சென்றுவிடும். மறுபடி தண்ணீர் வந்ததும் வரும். இது போல தான் பாமக. இவர்களுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதுமட்டுமில்லை. ராமதாஸ் ஒரு பேட்டியின் போது பாஜகவுக்கு எத்தனை மார்க் கொடுப்பீர்கள் என்று செய்தியாளர்கள் அவரிடம் கேட்டனர். இதற்கு பூஜ்ஜியம் மார்க் தான் கொடுப்போம் என்று சொன்னார். இப்போது அந்த கட்சியில் போய் அவரது வேட்பாளர் வெற்றி பெறுவார் என்று சொல்கிறார். ஒவ்வொரு தேர்தலின் போது கூட்டணியை மாற்றுகிறார். ஆளும் கட்சி தான் அவர்களுடைய கூட்டணி கட்சி. அதிமுகவை பொறுத்தவரை கூட்டணி கட்சிகளை நம்பி இல்லை. 2019 மற்றும் 2021 ல் அவர்களுடன் தான் கூட்டணி வைத்திருந்தோம். நாங்கள் வெற்றி பெற்றோமா?.
கூட்டணி கட்சிகள் வந்தால் வரவேற்போம். அதே நேரத்தில் கூட்டணி கட்சிகள் வரவில்லை என்றாலும் சொந்த பலத்தில் தேர்தலை சந்திப்போம். நிறைய திட்டங்களை நாட்டு மக்களுக்கு செய்திருக்கிறோம். 50 ஆண்டுகாலத்திற்கு மேலாக ஆட்சி செய்த கட்சி. பொன்விழா கண்ட கட்சி. அதிமுக ஆட்சியில் தான் தமிழ்நாடு ஏற்றம் பெற்றது. உயர் நிலைக்கு வந்தது. இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக திகழ்வதற்கு எங்களது அதிமுக ஆட்சியே காரணம். கூட்டணியை நம்பி நாங்கள் கட்சி நடத்தவில்லை.
டெல்லியில் என்ன நடக்கிறது என்பது நமக்கு முழுவதுமாக தெரியாது. அங்குள்ள நிலைமையை அறிந்து தான் ஊழல் நடந்ததா? இல்லையா? என்பது தெரியும். வேறொரு மாநிலம். அந்த மாநிலத்தில் என்ன நடந்தது என்ற முழு விவரம் தெரியாமல் நாம எப்படி சொல்ல முடியும். தவறு நடந்திருந்தால் தவறு.. தவறு நடக்கவில்லை என்றால் தப்பு. திமுக ஆட்சிக்கு வந்தபோது எங்கள் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புதுறையை ஏவி வழக்கு பதிவு செய்தது. நாங்கள் ஆட்சிக்கு வந்த போது மத்திய அரசின் வருமான வரித்துறை சோதனை செய்தார்கள். புதுசா வரவில்லை. விடியா திமுக அரசு செய்த வழக்கு பதிவினால் தான் அமலாக்கத்துறை வந்திருக்கிறது. விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடப்பதற்கு திமுக அரசு தான் காரணம். இவ்வாறு அவர் கூறினார்.