சியாச்சின் மலை உச்சியில் அமைச்சர் ராஜ்நாத் சிங் ஹோலி கொண்டாட்டம்!

உலகின் மிக உயர்ந்த எல்லைப் பாதுகாப்புப் பகுதியான சியாச்சின் மலை உச்சியில் நாளை(மார்ச். 24) ராணுவ வீரர்களுடன் இணைந்து ஹோலி பண்டிகையை கொண்டாடப் போவதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

ஜம்மு – காஷ்மீர் சியாச்சின் மலைப்பகுதியில் ஏற்படும் பனிச்சரிவு, கடும் பனிப்பொழிவு உள்ளிட்ட பல இயற்கை பேரிடர்களுக்கு மத்தியில் எல்லைப் பாதுகாப்பு பணியில் இந்திய ராணுவத்தினர் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், வட இந்தியாவில் விமரிசையாக கொண்டாடப்படும் ஹோலி பண்டிகையை சியாச்சினில் உள்ள ராணுவ வீரர்களுடன் இணைந்து நாளை(மார்ச். 24) கொண்டாடப் போவதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

’தியாகிகள் தினமான’ இன்று(மார்ச். 23) இந்திய விடுதலைப் போரில் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த சுதந்திரப் போராட்ட வீரர்கள் பகத் சிங், சுக்தேவ், ராஜ்குரு ஆகியோருக்கு இந்நாளில் அஞ்சலி செலுத்துவதாகவும், அவர்களது துணிச்சலையும், தியாகத்தையும், அர்ப்பணிப்பையும் நாடு எப்போதும் நினைவில் வைத்திருக்கும் எனவும் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டுள்ளார்.