பாமக கூட்டணி வெற்றி பெறாதது: வேல்முருகன்!

பாமக கூட்டணி வெற்றி பெறாதது என்று பண்ருட்டி வேல்முருகன் கருத்து தெரிவித்துள்ளார்.

கடைசி கட்டம் வரைத் தனது கட்சிக்கும் ஒரு சீட்டு திமுக ஒதுக்க வேண்டும் என திடீரென்று போர்க் கொடி பிடித்துவந்த பண்ருட்டி வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்குத் தொகுதி எதுவும் ஒதுக்கப்படவில்லை. ஆகவே, அவர் வேறு கூட்டணிக்குச் செல்வார் எனப் பேச்சு அடிப்பட்டது. ஆனால், அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, திமுக கூட்டணிக்குப் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார் வேல்முருகன். மேலும் இவர் கடந்த 12 ஆண்டுகளாக வலியுறுத்தி வந்த சுங்கச்சாவடி கட்டணம் ரத்து என்ற கோரிக்கையை திமுக தனது தேர்தல் வாக்குறுதியாக வழங்கி உள்ளது. அதைப்போன்று வேல்முருகனின் சாதிவாரி கணக்கெடுப்பு கோரிக்கையையும் திமுக முன்வைத்துள்ளது. அதனடிப்படையில் திமுக கூட்டணியிலேயே தொடர முடிவு எடுத்துள்ளார் வேல்முருகன்.

ஒரு காலத்தில் பாமகவிலிருந்து வந்த வேல்முருகன் சில மனக்கசப்புகளால் அந்தக் கட்சியை விட்டு வெளியேறினார். தனிக் கட்சியும் தொடங்கினார். வட தமிழ்நாட்டில் இவருக்குக் கணிசமான ஆதரவு இருந்து வருகிறது. இவருக்கு நேரடிப் போட்டியாக பாமக இருந்து வருகிறது. இந்தத் தேர்தலில் பாமக கூட்டணி அமைப்பதில் ஏற்பட்டு வந்த தடுமாற்றம் குறித்து சில கருத்துகளை முன்வைத்துள்ளார் வேல்முருகன். அவர் கூறியதாவது:-

பாஜக ஒரு மதவாதக் கட்சி. அந்தக் கட்சி மதவாத மற்றும் சாதியவாத உணர்வுகளைத் தூண்டி மக்களைப் பிளவுபடுத்தி வாக்குகளைப் பெறுவதற்காகச் சூழ்ச்சிகளைச் செய்து வருகிறது. அந்தச் சூழ்ச்சிக்கு பாமக ஏதோ ஒரு காரணத்திற்காக இரையாகி இருக்கிறது. பாட்டாளி மக்கள் கட்சி என்பது சமூகநீதிக்காகத் தொடங்கப்பட்ட ஒரு அரசியல் கட்சி. அந்தக் கட்சி சமூகநீதிக்கு எதிரான பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்பதை மக்கள் ஏற்கமாட்டார்கள். நானும் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் சாதிக் கலவரம் ஏற்படும் என்று சொல்கிறார். அந்தப் பாஜக கூட்டணியில் உள்ள சில கட்சியின் தலைவர்களுக்கு இடஒதுக்கீடு பற்றி புரிதல் இல்லை. வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு வங்கிய போது அதை எதிர்த்தும் டாக்டர் ராமதாசை விமர்சித்தும் பேசியவர்கள் இப்போது பாஜக கூட்டணியில் உள்ளனர். அப்படிப்பட்டவர்களுடன் ஒரே மேடையில் கைகோர்த்துக் கொண்டு சமூகநீதி வழி வந்த கட்சியின் தலைவர் காட்சி தருகிறார். இந்தக் கூட்டணி சார்பாக பாமக மக்களைச் சந்தித்து எப்படி வாக்குகள் கேட்க முடியும்? ஆகவே, இந்தக் கூட்டணி மிகப்பெரிய பின்னடைவைச் சந்திக்கும் என்பது என்னுடைய நம்பிக்கை.

பாஜக தங்களது கூட்டணி வெற்றி பெறாது என்று நினைக்கின்ற மாநிலங்களில் உள்ள எதிர்க்கட்சி தலைவர்களை அமலாக்கத்துறையை அனுப்பி ரெய்டு செய்து மிரட்டி வருகிறது. அப்படித்தான் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். தேர்தல் நேரத்தில் அவரது ஜனநாயகக் கடமையை அவர் ஆற்ற வேண்டும். அவரது கூட்டணிக்காக அவர் பிரச்சாரம் செய்ய வேண்டும். அதை செய்ய விடாமல் பாசிச பாஜக அரசு அவரை முடக்கப் பார்க்கிறது. இது ஜனநாயக நாட்டிற்கு நல்லதல்ல. எங்களது அச்சமே பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடு சர்வாதிகாரத்தை நோக்கி நகர்ந்துவிடும் என்பதுதான். அதற்காக வேலைகளைத்தான் மோடி அமலாக்கத்துறை மூலம் செய்து வருகிறார். அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ஈடி ரெய்டு நடந்துள்ளது. அதன் மூலம் அதிமுகவை முடக்கப்பார்க்கிறார் மோடி. மக்கள் இவர்களின் ஆட்சியை விரைவில் அகற்றுவார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.