ஆளுநரால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 7 மசோதாக்கள்: உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு மனு!

கேரள சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ள 7 மசோதாக்கள் நிலுவையில்உள்ளன. அவற்றுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் வேண்டுமென்றே தாமதப்படுத்தி வருகிறார் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் புகார் கூறியிருந்தார்.

இந்நிலையில் இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிடக் கோரி நேற்று உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில் கேரள அரசு சார்பில் கூறியுள்ளதாவது:-

கேரள சட்டப் பேரவையில் பல்கலைக்கழக சட்ட(திருத்த) மசோதா உள்ளிட்ட 7 மசோதாக்களை நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தோம். ஆனாலுக்கு அவற்றுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் ஆரிப் முகமது கான் தாமதம் செய்து வருகிறார். அரசியல் காரணங்களுக்காக இதை அவர் செய்து வருகிறார். சுமார் 2 ஆண்டு காலமாக மசோதாக்கள் கிடப்பில் உள்ளன. எந்தவித காரணமும் இல்லாமல் மசோதாக்களை கிடப்பில் போட்டுள்ளார். இதுதொடர்பாக கேள்வி எழுப்பியதற்கு அவற்றை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்புவதாக ஆளுநர் மாளிகை தெரிவிக்கிறது. இது அரசியலமைப்புச் சட்டத்தின் 14-வது பிரிவை மீறுவதாகும். இது முழுக்க முழுக்க மாநில அரசு தொடர்பான மசோதாக்களாகும்.

மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் வேண்டுமென்றே தாமதப்படுத்துவது ஆளுநரின் தன்னிச்சையான நடவடிக்கையை காட்டுகிறது. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிடவேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கேரள அரசு கூறியுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.