எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் அடிக்கல் நாட்டிய செங்கல்லை இன்னும் பத்திரமாக வைத்துள்ளதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
மதுரையில் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
கடந்த 2014-ம் ஆண்டு பிரதமர் மோடி மதுரைக்கு வந்தார். எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிவிட்டு சென்றார். அந்த கல்லை இன்னும் பத்திரமாக வைத்துள்ளேன். நீங்கள் மருத்துவமனையை கட்டிமுடிக்கும் வரை நான் இந்த செங்கல்லை கொடுக்க மாட்டேன்.
2020ல் நாட்டை வல்லரசாக்குவேன் எனக்கூறினார். ஆனால் இப்போது 2047ம் ஆண்டு நாட்டை வல்லரசாக மாற்றுவேன் என கூறியுள்ளார். பிரதமர் தமிழ் மொழி வளர்ச்சிக்கு ஒரு ரூபாய் கூட ஒதுக்கவில்லை. ஆனால் இந்தி, சமஸ்கிருதம் மொழிகளுக்கு 5 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளார்.
மிக்ஜம் புயல் பாதிப்பு, மற்றும் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்டபோது பிரதமர் தமிழகம் வரவில்லை. மழை வெள்ள நிவாரண நிதியாக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் 37 ஆயிரம் கோடி ரூபாய் கேட்டார். ஆனால் மத்திய நிதி மந்திரியோ, நாங்கள் என்ன ஏ.டி.எம். இயந்திரமா எனக்கேட்டார். மழை, வெள்ள பாதிப்புக்காக தமிழகத்துக்கு மத்திய அரசு ஒரு ரூபாய் நிதி கூட கொடுக்கவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நேற்று (மார்ச் 23) இரவு தேனி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் தங்கத் தமிழ்ச்செல்வனுக்கு ஆதரவு கேட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
உசிலம்பட்டி தொகுதி மக்கள் கடந்த 2019 எம்பி தேர்தலிலும், 2021 சட்டப்பேரவை தேர்தலில் திமுகவை ஏமாற்றிவீட்டீர்கள். இந்தமுறையும் உசிலம்பட்டி மக்கள் எங்களை (திமுகவை) ஏமாற்றுவீர்களா? உசிலம்பட்டி மக்களை நம்ப முடியவில்லை. அப்படி எங்களை ஏமாற்றினால் நீங்கள்தான் ஏமாந்துபோவீர்கள்.
காலையிலிருந்து ராமநாதபுரம், விருதுநகர் தொகுதியில் பிரச்சாரத்தில் இல்லாத எழுச்சி உசிலம்பட்டியில் தெரிகிறது. உசிலம்பட்டி தொகுதிக்கு ஒரு சிறப்பு இருக்கிறது. கடந்த எம்பி தேர்தலில் தமிழகத்தில் தேனி தொகுதியைத் தவிர 38 தொகுதியில் வெற்றிபெற்றோம். எனவே இம்முறை தேனி திமுக வேட்பாளர் தங்கத்தமிழ்ச்செல்வனை வெற்றி பெறச் செய்யும் வரை தேனி தொகுதியை நான் நம்ப மாட்டேன். நிச்சயம் எந்த சின்னத்திற்கு வாக்களிக்கப் போகிறீர்கள்? லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
தற்போது ஐபிஎல் மேட்ச் நடந்துகொண்டிருக்கிறது. அதில் நிறைய அணிகள் விளையாடுகின்றனர். அதுபோல், இந்த தேர்தலில் டிடிவி அணி, ஓபிஎஸ் அணி, சசிகலா அணி, இபிஎஸ் அணி, ஜெ.தீபா அணி பல அணிகளாக தேர்தலில் காசு வாங்கிக்கொண்டு போட்டியிடுகின்றனர். வரும் ஜூன் 3 கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்த நாள் விழா. அடுத்த நாள் ஜூன் 4ல் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. அவருக்கு பிறந்தநாள் பரிசாக 40க்கு 40 இடங்களில் வெற்றி பெற்று பரிசாக வழங்க வேண்டும்.
அதன்படி தேனி தொகுதியில் தங்கத்தமிழ்ச்செல்வனை 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயிக்க வைத்தால் மாதத்தில் 2 நாள் வந்து நான் வந்து தங்குகிறேன். உங்களை நம்பலாமா? நம்பிச் செல்கிறேன். தங்கத்தமிழ்ச் செல்வனை பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்யுங்கள். இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.