ஈரோடு எம்பி கணேசமூர்த்தி தற்கொலை முயற்சி குறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விளக்கமளித்துள்ளார்.
ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி எம்பியாக உள்ளவர் கணேச மூர்த்தி. இவர் மதிமுகவின் பொருளாளராகவும் பணியாற்றி வந்தார். கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஈரோடு தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது 5ஆவது ஆண்டாக ஈரோடு மக்களுக்கு தனது கடமையை ஆற்றி வருகிறார். இந்த நிலையில் அவர் நேற்று காலை திடீரென ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஏன் என காரணம் தெரியாத நிலையில் அவர் பூச்சி மருந்தை குடித்துவிட்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்பட்டது. இதையடுத்து ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். இந்த நிலையில் அவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த வைகோ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியிருப்பதாவது:-
கணேச மூர்த்தி நாடாளுமன்றத்திற்கு 3 முறை தேர்வு செய்யப்பட்டார். அவர் தனது கடமைகளை நன்றாகவே செய்திருந்தார். இந்த நிலையில் தேர்தலில் கட்சியில் உள்ளவர்கள் எல்லாம் துரை வைகோ போட்டியிட வேண்டும் என விரும்பினார்கள். மேலும் கணேச மூர்த்திக்கு அடுத்த முறை கொடுக்கலாம் என்றனர். இதற்கு நான் ஒப்புக் கொள்ளவில்லை. கட்சியில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு அதில் 99 சதவீதம் பேர் துரை வைகோவைத்தான் தேர்தலில் நிறுத்த வேண்டும் என்றனர். இதனால் கணேசமூர்த்தி எங்களுக்கு வேண்டாம் என்று அர்த்தம் கிடையாது. 2 சீட்டுகளை வாங்கி ஒன்றை துரை வைகோவுக்கும் மற்றொன்றை கணேசமூர்த்திக்கும் கொடுக்கலாம் என்றனர். நானும் அதற்கு சரி என்றேன். ஆனால் அதற்கு வாய்ப்பில்லாமல் போனது. அப்படியே இருந்தாலும் வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ஒரு தொகுதியை அவருக்கு ஒதுக்கி எம்எல்ஏவாக்கி முதல்வரிடம் சொல்லி நல்ல பதவியை பெற்றுத் தர வேண்டும் என நினைத்தேன்.
இன்னும் 2 ஆண்டுகளுக்குள் கணேசமூர்த்தியின் மனதில் உள்ள காயங்கள் எல்லாம் மாறும் என நினைத்தேன். ஆனாலும் துரை வைகோ தேர்வுக்கு பிறகும் என் வீட்டிற்கு வருவார், என் மகன், மகளிடம் பிரியமாகவே இருந்தார். எதையுமே வெளியே காட்டிக் கொள்ளாமல் நேற்று மருத்துவரிடம் 4 முறை பேசியிருக்கிறார். அப்போது அவரது பேச்சில் எந்த வித சோகமும் இல்லை என்கிறார்கள். அதன் பிறகு அவர் ஏன் பூச்சி மருந்தை குடித்தார் என தெரியவில்லை. மருந்தை குடித்துவிட்டு தனது மகனிடம், விஷயத்தை கூற “போய் வருகிறேன்” என்றாராம். பிறகு பதறியடித்துக் கொண்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்று முதலுதவி சிகிச்சைகளை செய்தனர்.
கோவையில் மருத்துவர்கள் கூறுகையில், “முதலுதவி சரியாக செய்ததால்தான் தற்போது சிகிச்சை அளிக்க முடிகிறது. எனினும் 50க்கு 50 சதவீதம் வாய்ப்புள்ளது. இந்த மாதிரி தற்கொலை கேஸ்களை நிறைய பிழைக்க வைத்திருக்கிறோம். அதற்குரிய உபகரணங்கள் மருத்துவமனையில் உள்ளது. அவற்றை கொண்டு சிகிச்சை அளித்தால் அவருடைய ரத்த அழுத்தம் குறைந்துவிடுகிறது. அதனால் அவரை மயக்க நிலையிலேயே வைத்திருக்கிறோம்” என மருத்துவர்கள் தெரிவித்தனர். எனவே நாம் நம்பிக்கையோடு இருப்போம். 2 நாட்கள் கழித்துத்தான் எதையும் சொல்ல முடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். விஷ முறிவுக்கான சிகிச்சையும் கணேசமூர்த்திக்கு அளிக்கப்படுகிறது. இவ்வாறு வைகோ கூறினார்.