ஈ.டி., சிபிஐ மிரட்டலால் பாஜகவில் சேரும் எதிர்க்கட்சி தலைவர்கள்: சுப்ரியா சுலே!

வருமான வரி துறை, சிபிஐ, ஈ.டி. ஆகியவற்றைக்கொண்டு மிரட்டுவதன் காரணமாகவே எதிர்க்கட்சி தலைவர்கள் பாஜகவில் ஒன்றன்பின் ஒன்றாக இணைந்து வருகின்றனர் என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (சரத்சந்திர பவார்) பாராமதி தொகுதி வேட்பாளர் சுப்ரியா சுலே தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சுப்ரியா சுலே மேலும் கூறியதாவது:-

பாராமதி தொகுதியில் எனக்கு எதிராக யார் போட்டியிடுகிறார்கள் என்பது தெரியவில்லை. டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கைது ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டதை காட்டுகிறது. எதிர்க்கட்சிகளை பிளவுபடுத்தும் வேலையை பாஜக செய்து வருகிறது. அங்கு சென்ற தலைவர்கள் எல்லாம் பாஜகவின் சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்டு அக்கட்சியில் இணையவில்லை. ஐசிஇ (ஐஸ்) எனப்படும் வருமானவரி துறை, சிபிஐ மற்றும் ஈ.டி., ஆகிய விசாரணை அமைப்புகளைக் கொண்டு மிரட்டியதன் விளைவாகவே பாஜகவில் இணைந்துள்ளனர். அப்படித்தான் கட்சிகளை அவர்கள் உடைக்கிறார் கள். இது அரசியல் அல்ல. ஜனநாயக படுகொலை.

பாராமதியைப் பொருத்தவரையில் எனது பணியையும், நாடாளுமன்ற செயல்பாடுகளையும் மக்கள் அறிவர். என் மீது எந்தஊழல் குற்றச்சாட்டுகளும் இல்லை. எனவே, இத்தொகுதி மக்கள் எனக்கு மீண்டும் ஆதர வளிப்பர். இவ்வாறு சுப்ரியா சுலே தெரிவித்தார்.

பாராமதி தொகுதி தேசியவாத காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக கருதப்படுகிறது. 1996 முதல் 2009 வரை இத்தொகுதியில் சரத்பவார் போட்டியிட்டு வென்றார். அதன்பிறகு அவரது மகள் சுப்ரியா சுலே தொடர்ந்து எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டு வருகிறார். இந்த தேர்தலிலும் பாராமதி தொகுதியிலிருந்துதான் சுப்ரியா சுலே போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து சரத் பவாரின் அண்ணன் மகனான அஜீத் பவாரின் மனைவியும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான சுனேத்ரா பவார் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.