காங்கிரஸை முடக்கலாம் என கனவு காண்கிறார் மோடி: செல்வப்பெருந்தகை

நிதி ஆதாரத்தை முடக்கினால் காங்கிரஸை முடக்கலாம் என கனவு காண்கிறார் மோடி என்று செல்வப்பெருந்தகை கூறினார்.

தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கு.செல்வப்பெருந்தகை செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

ஒவ்வொரு தொகுதியிலும் வேட்பாளர்களை பரிசீலனை செய்து வெளியிட வேண்டியநிலை காங்கிரஸ் கட்சிக்கு இருக்கிறது. பாஜகவை போல ஆளைபார்த்து சீட்டு வழங்குவதில்லை. பாஜக அரசால் எங்களுடைய நிதி ஏறக்குறைய ரூ.285 கோடி திருடப்பட்டுள்ளது. பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியையும், ஜனநாயகத்துக்காக குரல் கொடுத்து வரும் கட்சிகளையும் தொடர்ந்து முடக்கி வருகிறார். 2017-18ம் நிதியாண்டில் நாங்கள் தாமதமாக தாக்கல் செய்தோம் என்பதற்காகவும், இன்னொரு வழக்கு தாக்கல் செய்யவில்லை என்பதற்காகவும் 11 கணக்குகள் பாஜகவால் முடக்கப்பட்டுள்ளன.

பாஜக எங்களது கட்சியில் இருந்து ரூ.115.32 கோடியை எடுத்திருக்கிறது. காங்கிரஸ் தலைவர்கள் மக்களை சந்திக்காமல் தடுக்க வேண்டும். அவர்களது போக்குவரத்துக்கு இடையூறு செய்ய வேண்டும். இதற்காக நிதி ஆதாரத்தை முடக்கினால் காங்கிரஸ் கட்சியை முடக்கிவிடலாம் என பிரதமர் மோடி பகல் கனவு கொண்டிருக்கிறார். பணம் ஒரு பொருட்டே கிடையாது. மக்களை நம்பி நாங்கள் தேர்தலில் நிற்கிறோம். மக்களுக்கான கட்சி காங்கிரஸ் கட்சியாகும்.

மக்களவை தேர்தலையொட்டி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வி-பாட் 100 சதவீதம் எண்ணப்பட வேண்டும் என்றும், அவற்றை எண்ணும் போது பூத் வாரியாக இல்லாமல் கலந்து எண்ண வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்திடமும், உச்ச நீதிமன்றத்திடமும் வேண்டுகோள் விடுத்திருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.