நீலகிரி லோக்சபா தேர்தலில் பாஜக சார்பில் மத்திய இணையமைச்சர் எல் முருகன் போட்டியிடும் நிலையில் தேர்தல் நடத்தை விதியை மீறியதாக கூறி அவர் மீதும், பாஜக மாவட்ட தலைவர் மீதும் போலீசார் அதிரடியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தமிழக முன்னாள் பாஜக தலைவர் எல் முருகன். இவர் ராஜ்யசபா எம்பியாக தேர்வு செய்யப்பட்டார். மேலும் பிரதமர் மோடியின் அமைச்சரவையில் மத்திய இணையமைச்சராக செயல்பட்டு வருகிறார். வரும் லோக்சபா தேர்தலில் நீலகிரி (தனி) தொகுதியில் அவர் பாஜக வேட்பாளராக களமிறங்கி உள்ளார். இந்த நீலகிரி தொகுதியில் தற்போது சிட்டிங் எம்பியாக திமுகவின் ஆ ராசா உள்ளார். இவர் மீண்டும் திமுக சார்பில் அதே தொகுதியில் போட்டியிடும் நிலையில் தான் பாஜக வேட்பாளராக எல் முருகன் களமிறக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தான் எல் முருகன் கடந்த 25ம் தேதி நீலகிரி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். இவரது வேட்பு மனு நேற்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதற்கிடையே தான் வேட்பு மனு தாக்கல் நாளில் எல் முருகன் பல்வேறு கோவில்களில் சாமி தரிசனம் செய்தார். வேட்பு மனு தாக்கலுக்கு, முன்பும் அவர் கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்தார். இந்த வேளையில் கடநாடு எனும் கிராமத்தில் உள்ள கோவிலுக்கு எல் முருகன் சென்றபோது கூட்டம் அதிகமாக கூடியுள்ளது. அதோடு சமுதாய கூடம் அருகே நடத்தப்பட்ட கூட்டத்தில் எல் முருகன் பங்கேற்றுள்ளார். பொதுவாக வேட்பாளர்கள் கூட்டம் நடத்த முறைப்படி அனுமதி வாங்க வேண்டும். ஆனால் இந்த கூட்டத்துக்கு எந்த அனுமதியும் வாங்கவில்லை என கூறப்படுகிறது.
இதுபற்றி தேர்தல் பறக்கும்படை அலுவலரான துணை தாசில்தார் தனலட்சுமி தேனாடுகம்பை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் எல் முருகன் மீது தேர்தல் நடத்தை விதி மீறியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர மாவட்ட பாஜக தலைவர் மோகன் ராஜ் உள்ளிட்டோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.