ஆ ராசா காரை சரியாக சோதனை செய்யாத பறக்கும் படை பெண் அதிகாரி சஸ்பெண்ட்!

நீலகிரி லோக்சபா தொகுதியில் சிட்டிங் எம்பியான ஆ ராசா மீண்டும் திமுக வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்நிலையில் தான் அவரது காரை சரியாக சோதனை செய்யாத தேர்தல் பறக்கும்படையின் பெண் அதிகாரி அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

நீலகிரி லோக்சபா தொகுதியின் எம்பியாக திமுகவின் ஆ ராசா உள்ளார். நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் மீண்டும் ஆ ராசா போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாஜக வேட்பாளராக மத்திய இணையமைச்சர் எல் முருகன் களமிறங்கி உள்ளார். இந்நிலையில் தான் கடந்த 25ம் தேதி ஆ ராசா தனது காரில் நீலகிரி சென்றார். கோத்தகிரிக்கு சென்ற ஆ ராசாவுக்கு கட்சியினர் உற்சாகமாக வரவேற்பு வழங்கினர். அதன்பிறகு அவர் உதகை நோக்கி புறப்பட்டார். அப்போது கோத்தரி-மேட்டுப்பாளையம் சாலையில் குங்சப்பனை சோதனை சாவடி அருகே சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தி வந்தனர். ஆ ராசாவின் காரை பறக்கும் படையினர் நிறுத்தினர். ஆ ராசா, சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், திமுக மாவட்ட செயலாளர் முபாரக் உள்ளிட்டவர்கள் காரை விட்டு கீழே இறங்கிய நிலையில் பறக்கும் படையினர் காரில் சோதனை நடத்தினர். காரில் இருந்து எதுவும் கைப்பற்படவில்லை. இதையடுத்து காரில் ஏறி ஆ ராசா உள்ளிட்டவர்கள் புறப்பட்டு சென்றனர்.

இந்நிலையில் தான் ஆ ராசாவின் காரில் நடத்தப்பட்ட சோதனை தொடர்பான வீடியோ வெளியானது. அப்போது காரின் பின்புறம் சூட்கேஸ், பேக்குகள் என பல பெட்டிகள் இருந்தன. ஆனால் அதனை பறக்கும் படையினர் திறந்து சரியாக சோதனையிடாதது தெரியவந்தது. இதனை பலரும் விமர்சனம் செய்ய தொடங்கினர். மேலும் ஆ ராசாவுக்கு ஆதரவாக பறக்கும் படையினர் செயல்படுவதாக புகார் கிளம்பியது. இதையடுத்து நீலகிரி லோக்சபா தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான அருணா விசாரணைக்கு உத்தரவிட்டார். சம்பவம் தொடர்பாக தேர்தல் பறக்கும் படை அதிகாரி கீதா மற்றும் பாதுகாப்பு பணியில் நியமனம் செய்யப்பட்டு இருந்த உதவி ஆய்வாளர் சிவராமன் ஆகியோரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இன்றைய தினம் விசாரணைக்கு நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டது. இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையின்போது திமுக எம்பியும், நீலகிரி திமுக வேட்பாளருமான ஆ ராசாவின் காரில் சரியாக சோதனை நடத்தாமல் இருந்ததற்கான முகாந்திரம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து பறக்கும் படை பெண் அதிகாரியான கீதாவை அதிரடியாக சஸ்பெண்ட் செய்து தேர்தல் நடத்தும் அலுவலர் அருணா உத்தரவிட்டுள்ளார்.