எனது சொத்து மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளதை நிரூபித்தால் அரசியலை விட்டே விலக தயார்: அண்ணாமலை!

தனது சொத்து மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது என்பதை நிரூபித்தால் அரசியலை விட்டே விலகத் தயாராக உள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சவால் விடுத்துள்ளார்.

தமிழ்நாட்டில் இந்த முறை ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19ஆம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. இந்த முறை திமுக, அதிமுக, பாஜக, நாதக என பல முனை போட்டி தமிழ்நாட்டில் ஏற்படுகிறது. கடந்த காலங்களில் அதிமுக கூட்டணியில் பயணித்து வந்த பாஜக இப்போது தனது தலைமையில் கூட்டணியை உருவாக்கி உள்ளது. இதில் பாமக, அமமுக, ஓபிஎஸ் அணி, தமிழ் மாநில காங்கிரஸ் எனப் பல கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த முறை பாஜக நேரடியாக 19 லோக்சபா தொகுதிகளில் போட்டியிடுகிறது. அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் போட்டியிடுகிறார். அவரது வேட்புமனு ஏற்கப்பட்டதே பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பி இருந்தது. அதாவது அவரது வேட்புமனுவில் பிழை இருந்ததாகவும் அதையும் தாண்டி வேட்புமனுவை ஏற்றதாக அதிமுக, நாதக குற்றஞ்சாட்டினர். இருப்பினும், அவர் இரண்டு மனுக்களைத் தாக்கல் செய்ததாகவும் அதில் தவறாக இருந்த மனு நிராகரிக்கப்பட்டு, சரியான மனு ஏற்றுக் கொள்ளப்பட்டதாக விளக்கம் தரப்பட்டது.

இந்தச் சூழலில் அண்ணாமலை குறித்து மற்றொரு சர்ச்சை கிளம்பியது. கடந்த 2021 சட்டசபைத் தேர்தலில் அவர் போட்டியிட்ட நிலையில், மூன்று ஆண்டுகளில் அவரது சொத்து மதிப்பு 117% உயர்ந்ததாகத் தகவல்கள் பரவின. இந்தச் சூழலில் இது தொடர்பாகக் கடலூரில் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அவர் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறியதாவது:-

நான் எனது வேட்புமனுவில் எல்லா விவரங்களையும் சொல்லி இருக்கிறேன். எனது சொத்து விவரங்கள் அதில் கூறப்பட்டுள்ளது. திமுக அரசு என் மீது பதிவு செய்துள்ள வழக்கு குறித்த தகவல்களும் அதில் உள்ளது. அதில் என்ன தவறான தகவல் என்று சொல்கிறார்கள் எனத் தெரியவில்லை. எனது சொத்து 117% உயர்ந்து இருக்கிறது என்பதை நிரூபித்தால் நான் அரசியலை விட்டே விலகுகிறேன். 11% தான் உயர்ந்து இருக்கிறது. வாட்ஸ்அப் செய்திகளை மட்டும் நம்பக் கூடாது. சராசரியாக ஒரு நபருக்கு அவர் என்ன சொத்து வைத்து இருந்தாலும் சொத்து மதிப்பு 4 முதல் 6% வரை உயரும். ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த போது எனது சொந்த பணத்தில் நிலம் ஒன்றை வாங்கி இருந்தேன். அந்த சொத்து என்பது சராசரியாக 4 முதல் 6% வரை உயரும். 3 ஆண்டுகள் என்றால் அது 18% வரை உயர்ந்து இருக்கும். டிஆர் பாலுவின் மனைவி சொத்து மதிப்பு 450% உயர்ந்து இருக்கிறது.

நான் இங்கே மாற்று அரசியலை முன்வைக்க வந்துள்ளேன். பொய் பிரச்சாரம் செய்ய வரவில்லை. நான் போட்டியிடும் கோவையில் வாக்காளர்களுக்கு ஒரு ரூபாய் கூட தர மாட்டேன் என்பதில் உறுதியாக இருக்கிறேன். யார் வேண்டுமானாலும் என் பிரச்சாரத்தை செக் செய்யலாம். நான் பணம் கொடுத்தால் அதை நிரூபிக்கலாம் என்பதைச் சவாலாகவே விடுத்துள்ளேன். வேறு எந்த அரசியல் கட்சியாவது இப்படி சவால் விடுமா.. இந்த நேர்மையான அரசியலைத் தான் நான் முன்னெடுக்கிறேன். இதற்கு மக்கள் ஆதரவு அளிப்பார்கள் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் பாமக வேட்பாளர் தங்கர் பச்சானுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்வதற்காக அண்ணாமலை இன்று கடலூருக்கு வருகை தந்தார். கடலூரில் உள்ள முதுநகர் பகுதியில் தொண்டர்கள் மத்தியில் தங்கர் பச்சானுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டார் அண்ணாமலை. அப்போது மத்திய அரசின் சாதனைகளை முன்வைத்து பேசிய அண்ணாமலை, தங்கர் பச்சானுக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து வெற்றியடையச் செய்ய வேண்டும் என்றும், பிரதமர் கூறிய 400 எம்.பிக்களில் தங்கர் பச்சானும் ஒருவர் என்றும் பேசினார்.

அடித்தட்டு மக்களுக்கு பாரபட்சம் இன்றி பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன. ஆனால் தி.மு.க. ஆட்சியில் வெறும் வாய் பேச்சு தான். முதலமைச்சர், எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மக்களுக்கான திட்டங்கள் எதுவும் செய்யவில்லை. ஆனால் தங்கர் பச்சானை நீங்கள் வெற்றி பெறச் செய்தால் முந்திரி பதப்படுத்தும் தொழிற்சாலை உடனடியாக கொண்டுவரப்படும் எனத் தெரிவித்தார்.