இந்திய எல்லையில் உள்ள 30 இடங்களுக்குச் சீன பெயர்களை அறிவித்த சீனா!

இந்தியாவுக்குச் சொந்தமான அருணாச்சல பிரதேசத்தைச் சீனா உரிமை கொண்டாடி வரும் நிலையில், சுமார் இந்திய எல்லையில் உள்ள 30 இடங்களுக்குச் சீன பெயர் மாற்றம் செய்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

நமது அண்டை நாடுகளில் ஒன்றான சீனா எல்லையில் அத்துமீறல் போக்கையே கடைப்பிடித்து வந்து இருக்கிறது. இந்திய எல்லை பகுதியில் கடந்த காலங்களில் பல முறை அத்துமீறல் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளது. குறிப்பாக கல்வான் பகுதியில் நடந்த மோதல் இரு நாடுகளுக்கும் இடையே மோசமான பிளவை ஏற்படுத்தியது. இது மட்டுமின்றி இந்தியாவுக்குச் சொந்தமான பல பகுதிகளைச் சீன தனக்குச் சொந்தமானது என்கிறது. சீனாவின் கூற்றுக்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை என்ற போதிலும் சீனா அந்த பிரதேசங்களை தனக்குச் சொந்தமானது என்றே தொடர்ந்து கூறி வருகிறது.

இதற்கிடையே இந்திய எல்லையில் அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த மேலும் 30 இடங்களுக்குச் சீன பெயர் மாற்றம் செய்துள்ளது. இது குறித்த அறிவிப்பு சீன உள்விவகார துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சவுத் சீனா மார்னிங் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. அருணாச்சலப் பிரதேசம் பகுதியில் உள்ள பல கிராமங்களுக்கு புதிய பெயர்கள் என்று சீனா ஒரு லிஸ்டை அறிவித்துள்ளது. இந்தியாவுக்குச் சொந்தமான அருணாச்சல பிரதேசத்தை தனக்குச் சொந்தம் எனச் சொல்லும் சீனா, அப்பகுதியை ஜாங்னன் என்று அழைக்கிறது. மேலும், சீனாவுக்குக் கீழ் இருக்கும் திபெத்திய தன்னாட்சிப் பகுதியின் ஒரு பகுதியாக இருப்பதாகச் சீனா எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் கூறி வருகிறது.

இது குறித்து சீன செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், “மாநில கவுன்சில் (சீனா அமைச்சரவை) ஜாங்னானில் உள்ள சில இடங்களுக்கு புதிய பெயர்களைத் தயார் செய்யப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது. 11 மாவட்டங்கள், 12 மலைகள், நான்கு ஆறுகள், ஒரு ஏரி, ஒரு மலைப்பாதை மற்றும் ஒரு நிலப்பகுதியின் பெயர்களை மாற்றியுள்ளார். சீன எழுத்துக்கள், திபெத்திய எழுத்துகள் மற்றும் மாண்டரின் சீனத்தின் ரோமானிய வடிவமான பின்யின் ஆகிய எழுத்து வடிவங்களில் அந்த பெயர்களை வெளியிட்டுள்ளது.

எல்லையில் உள்ள கிராமங்களுக்குச் சீன தனது மொழியில் பெயர் சூட்டுவது இது முதல்முறை இல்லை. ஏற்கனவே கடந்த காலங்களிலும் இதுபோன்ற அத்துமீறல் நடவடிக்கைகளிலும் சீனா ஈடுபட்டு இருக்கிறது. அருணாச்சல பிரதேசம் மீது சீன உரிமை கொண்டாடும் நிலையில், அதை இந்தியா அடிப்படையற்றது மறுத்து வருகிறது. ஒவ்வொரு முறையும் சீனா இதுபோன்ற செயல்களைச் செய்யும் போதும் இந்தியா அதற்கு மிகக் கடுமையாக எதிர்வினையாற்றும். அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும், சீனா தொடர்ந்து உரிமை கொண்டாடினாலும் கூட அது இந்தியாவின் ஒரு பகுதி என்பது மாறாத உண்மை என்று மத்திய செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியிருந்தார். அவர் மேலும் கூறுகையில், “எங்கள் நிலைப்பாடு மீண்டும் தெளிவானது. சீனா தனது ஆதாரமற்ற கூற்றுக்களை எத்தனை முறை வேண்டுமானாலும் திரும்பத் திரும்பச் சொல்லலாம். இதனால் இந்தியாவின் நிலையை மாற்றப் போவதில்லை. அருணாச்சலப் பிரதேசம் எப்போதும் இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதியாகும்” என்றார்.