கச்சத்தீவுக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் தர வேண்டிய அவசியமில்லை என அப்போதைய பிரதமர் நேரு கூறியதாக ஆர்.டி.ஐ. அளித்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டதன் பின்னணி குறித்த தகவல்களை கேட்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை விண்ணப்பித்திருந்தார். அதற்கு அளிக்கப்பட்ட பதிலில், இந்தியா சுதந்திரம் அடைந்தது முதலே இலங்கை உரிமை கோரியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குட்டித் தீவான கச்சத்தீவுக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் தர வேண்டிய அவசியமில்லை என அப்போதைய பிரதமர் நேரு கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கச்சத்தீவு உரிமையை இலங்கைக்கு விட்டுத் தர தயாராக இருப்பதாக நேரு கூறியதாகவும் ஆர்.டி.ஐ. பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சச்சத்தீவை இலங்கைக்கு கொடுக்கும் தகவலை, 1974-ம் ஆண்டு அப்போதைய தமிழ்நாடு முதல்-அமைச்சர் கருணாநிதியிடம் வெளியுறவுத்துறை செயலாளர் தெரிவித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்.டி.ஐ. அளித்த விரிவான தகவல்களுடன் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-
கச்சத்தீவை தாரை வார்த்தது தொடர்பாக ஆர்.டி.ஐ. மூலம் கேட்டப்பட்ட தகவலை வெளியுறவுத்துறை அமைச்சகம் அளித்துள்ளது. இதுவரை பொதுவெளியில் இல்லாத இரண்டு முக்கியமான விஷயங்கள் அதில் உள்ளன. கச்சத்தீவு தொடர்பாக 1968ல் நடந்த ஆலோசனை, அதன்பின்னர் வெளியுறவுத்துறை செயலாளர், நமது முதல்-அமைச்சர் கருணாநிதி ஆகியோர் 1974-ல் கச்சத்தீவு பற்றி பேசியது தொடர்பான தகவல்களை கொடுத்துள்ளனர். இதை எந்த ஒரு இந்திய குடிமகன் படித்தாலும் அவர்களின் ரத்தம் கொதிக்கும். அந்த அளவுக்கு, காங்கிரஸ் ஆட்சியின்போது பல சதி வேலை செய்து கச்சத்தீவை தாரை வார்த்திருக்கிறார்கள். இலங்கைக்கு கச்சத்தீவை விட்டுக்கொடுத்ததில் காங்கிரசும், தி.மு.க.வும் கூட்டுச் சேர்ந்தன. இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிலையில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:-
தி.மு.க. தனது தேர்தல் வாக்குறுதியில் அனைத்து மகளிருக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்குவோம் என்று சொல்லித்தான் ஆட்சிக்கு வந்தது. ஆனால் தற்போது வெறும் 30 சதவீத மகளிருக்கு மட்டுமே மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படுகிறது.
எனக்கு ஏன் ஆயிரம் ரூபாய் நீங்கள் வழங்கவில்லை என்று ஒரு சகோதரி முதல்வரை இன்று கேள்வி கேட்டுள்ளார். நீங்கள் இந்த கேள்வியை கேட்பதே தவறு என்று அந்த சகோதரியிடம் மு.க.ஸ்டாலின் சொல்கிறார். இந்த ஆணவம் தி.மு.க.வின் பிறவி குணம். தமிழகத்தில் அரசியல் மாற்றத்திற்காக காத்திருக்கும் பொதுமக்கள் தி.மு.க.வை இந்த தேர்தலில் முழுமையாக நிராகரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.