உக்ரைன் மீதான போரில் இந்திய இளைஞர்களை கட்டாயப்படுத்தி ரஷ்யா தன்னுடைய ராணுவத்தில் இணைத்து போரில் ஈடுபடுத்துவதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
ரஷ்ய ஏஜெண்டுகளிடம் சிக்கி சித்ரவதைக்கு உள்ளான 2 ஹரியாணா இளைஞர்கள் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு தற்போது தப்பிவந்துள்ளனர். தங்களைப் போல், 200-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ரஷ்ய எல்லையில் உள்ள காட்டில் கடத்திவைக்கப்பட்டுள்ளனர் என்றும், ரஷ்ய ராணுவத்தில் சேர மிரட்டப்படுகின்றனர் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். முகேஷ் (21), சன்னி (24) இருவரும் உறவினர்கள். ஹரியாணாவைச் சேர்ந்தவர்கள். அவர்கள் கூறியதாவது:-
ஜெர்மனியில் ஹோட்டல் வேலை என்றுதான் ஏஜெண்டுகள் எங்களை அழைத்துச் சென்றார்கள். ஆனால், அவர்கள் எங்களை பெலாரஸ் அழைத்துச் சென்றனர். பெலாரஸ் ரஷ்யாவின் அண்டை நாடாகும். அங்கிருந்து அடர்ந்த காடு வழியாக ரஷ்யா எல்லைக்குள் எங்களை கூட்டிச் சென்றனர். அங்கு ஒரு பெரிய முகாம் இருந்தது. எங்களைப் போல் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் அங்கு தங்க வைக்கப்பட்டிருந்தனர். சில ரஷ்ய குடியேற்ற ஏஜெண்டுகள் எங்களை ரஷ்ய ராணுவத்தில் சேரும்படி அறிவுறுத்தினர். ரஷ்ய ராணுவத்தில் சேர்ந்தால் ரஷ்ய குடியுரிமை தருவதாகவும் ரஷ்ய பெண்ணை மணமுடிக்க ஏற்பாடு செய்வதாகவும் அவர்கள் கூறினர்.
இதற்கு நாங்கள் மறுத்ததால் எங்களை கடுமையாக தாக்கினர். ஐஸ் கட்டி மீது எங்களைப் படுக்க வைத்தனர். தீக்கம்பியால் சூடு வைத்தனர், கத்தியால் உடலைக் கீறி சித்ரவதைப்படுத்தினர். 15 நாட்களுக்கு அவர்கள் எங்களுக்கு உணவு வழங்கவேயில்லை. ஒரு கட்டத்தில் அவர்கள் எங்களை சட்ட விரோதமாக ரஷ்யாவுக்கு நுழைந்ததாகக் கூறி, மாஸ்கோ சிறைச்சாலையில் அடைத்தனர். மாஸ்கோவில் உள்ள வழக்கறிஞர் ஒருவர்தான் எங்களை சிறையிலிருந்து வெளியே எடுத்தார். அதற்கு கட்டணமாக ரூ.6 லட்சம் வழங்கினோம்.
எங்களைப் போல் தெற்காசிய இளைஞர்களை ரஷ்யாவுக்கு அழைத்து வந்து அங்குள்ள ராணுவத்தில் சேர்த்து உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபடுத்த ஏஜெண்டுகளுக்கு ரஷ்ய அரசு பணம் கொடுக்கிறது என்று அந்த வழக்கறிஞர் எங்களிடம் சொன்னார். நாங்கள் தப்பி வந்துவிட்டோம். ஆனால், எங்களைப் போல், 200 இளைஞர்கள் அந்த முகாமில் சித்ரவதை அனுபவித்து வருகின்றனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இருவரின் குடும்பத்தினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஒரு பெண் உட்பட 6 குடியேற்ற ஏஜெண்ட்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக ஹரியாணா காவல் துறை தெரிவித்துள்ளது.