செந்தில் பாலாஜி ஜாமீன் மனு: அமலாக்கத் துறை பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு!

சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் சிறையில் உள்ள செந்தில் பாலாஜி, தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இந்த விவகாரத்தில் அமலாக்கத் துறை பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

தமிழக மின்சார துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. இவருக்குச் சொந்தமான இடங்களில் கடந்தாண்டு மே மாதம் முதலில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில், தொடர்ந்து ஜூன் மாதம் அமலாக்கத் துறை அதிகாரிகளும் சோதனை நடத்தினர். அன்றைய தினமே அவர் சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையிலும் அட்மிட் செய்யப்பட்டார். அங்கே அவருக்கு இதய ஆப்ரேஷன் செய்யப்பட்ட நிலையில், அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடக்கும் நிலையில், அவர் மீது குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. அவரது நீதிமன்ற காவல் தொடர்ந்து நீட்டிக்கப்படும் நிலையில், இதனால் சுமார் 9 மாதங்களாக அவர் சிறையிலேயே இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதுவரை அவர் ஜாமீன் கோரி பல மனுக்களைத் தாக்கல் செய்திருந்தார். இருப்பினும், அதில் அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. சிறையில் இருந்த செந்தில் பாலாஜி பல மாதங்கள் இலாகா இல்லாத அமைச்சராகத் தொடர்ந்தார். இது தொடர்பாகவும் நீதிமன்றம் சில கருத்துகளைக் கூறியிருந்தது. இதையடுத்து கடந்த மாதம் செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்தார்.

இந்தச் சூழலில் தான் மீண்டும் ஜாமீன் கோரி அவர் சுப்ரீம் கோர்ட்டிற்கு சென்று முறையிட்டார். அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்ட நிலையில், அவருக்கு ஜாமீன் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. அவரது ஜாமீன் மனு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. உச்சநீதிமன்ற நீதிபதி அபய் எஸ்.ஓஹா தலைமையிலான அமர்வில் செந்தில் பாலாஜி மனு விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இது தொடர்பாக அமலாக்கத் துறைக்கு நோட்டீஸ் அனுப்பவும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

முன்னதாக சென்னை ஐகோர்ட்டில் செந்தில் பாலாஜி ஜாமீன் மனுவை தாக்கல் செய்து இருந்தார். ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்த சென்னை ஐகோர்ட் அவருக்கு எதிரான வழக்கு விசாரணையை, மூன்று மாதங்களில் முடிக்க முதன்மை சிறப்பு நீதிமன்றத்துக்கு, உத்தரவிட்டது. மூன்று மாதங்களில் விசாரணையை முடிக்கச் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டதற்கு எதிராகவும் செந்தில் பாலாஜி சுப்ரீம் கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இருப்பினும், வழக்கின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிப்பது தேவையற்றது என்று கூறிய சுப்ரீம் கோர்ட், இடைக்காலத் தடை விதிக்க மறுத்துவிட்டனர். மேலும், இந்த வழக்கு விசாரணையை வரும் 29ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.